உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் பட்டாசுக்கு தடை விதிக்க 1961லேயே பரிந்துரை ஆவண காப்பக கடிதத்தில் தகவல்

டில்லியில் பட்டாசுக்கு தடை விதிக்க 1961லேயே பரிந்துரை ஆவண காப்பக கடிதத்தில் தகவல்

புதுடில்லி:தலைநகர் டில்லியில் 1961ம் ஆண்டே பட்டாசுக்கு தடை விதிப்பது குறித்து தீவிரமாக விவாதங்கள் நடந்துள்ளன என்ற தகவல் ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்படும் கடிதம் வாயிலாக தெரிய வந்துள்ளது. டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசை கட்டுப்படுத்த, பட்டாசு வெடிக்க டில்லி அரசு 2015ல் தடை விதித்தது. ஆனாலும், அண்டை மாநிலங்களில் இருந்து பட்டாசுகளை கொள்முதல் செய்து டில்லியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதும், மக்கள் அதை வாங்கி வெடிப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் 2018ம் ஆண்டு தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பட்டாசு தயாரிக்க, விற்க மற்றும் வெடிக்க தடை விதித்தது. தனிப்படை போலீசாரும் அதிரடி சோதனை நடத்தி பட்டாசுகளை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், டில்லியில் பசுமைப் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் அனுமதி அளிக்குமாறு டில்லி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒட்டுமொத்தமாக பட்டாசு விதிக்க தடை விதிப்பது சரியல்ல என்ற கருத்து தெரிவித்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டில்லியில் பட்டாசு வெடிக்க தடை என்பது ஒரு புதிய பிரச்னை அல்ல. கடந்த, 1961ம் ஆண்டு பட்டாசுகளால் ஏற்படும் மாசுபாடு குறித்து தீவிர விவாதங்கள் நடைபெற்றுள்ளன. மேலும், பட்டாசுக்கு தடை விதிப்பது குறித்தும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன என்ற தகவல், ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்படும் கடிதம் வாயிலாக தெரிய வந்து உள்ளது. டில்லி சதர் பஜார் வியாபாரிகள் சங்கத்தில் இருந்து துணைச் சங்கம் ஒன்று, 1961ம் ஆண்டு உருவானது. இந்தச் சங்கம் பண்டிகைகள் மற்றும் பிற கொண்டாட்டங்களின் போது அதிக அளவில் பட்டாசுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஒலி மாசுபாடு குறித்து டில்லி தலைமை ஆணையரிடம் புகார் மனு கொடுத்தது. அந்த மனு, மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1961ம் ஆண்டில், டில்லியின் மக்கள் தொகை 26 லட்சமாக இருந்தது. ஆனாலும், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசுபாடு மக்களுக்கு பெரும் பிரச்னையாகவே இருந்தது. இந்தப் பிரச்னையை தீர்க்க அதிக டெசிபல் கொண்ட பட்டாசுகளுக்கு முழுமையாக தடை, இரவு 10 மணிக்குப் பின் பட்டாசு வெடிக்க தடை, பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு கடுமையான விதிமுறை, மீறுவோருக்கு கடும் அபராதம் விதித்தல் ஆகியவை பரிந்துரை செய்யப்பட்டது., அப்போது, இந்த மனுவுக்கு பதில் அளித்த மத்திய அரசு, பட்டாசுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை. வெடிபொருள் சட்டம் மற்றும் விதிமுறைகளின் கீழ் பட்டாசு உற்பத்தி ஏற்கனவே ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசுபாட்டைக் குறைக்க 1958ல் பட்டாசுகளின் ஒலி அளவுகள் குறைக்கப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது. மேலும், போலீசின் தீவிர கண்காணிப்பு, மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் இரவில் பட்டாசு வெடிக்க தடை செய்வதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்றும் மத்திய அரசு தன் பதிலில் கூறியுள்ளது. கடந்த 1961ம் ஆண்டில் டில்லிக்கு முதல்வர் கிடையாது. டில்லியின் முதல் முதல்வராக சவுத்ரி பிரம்ம பிரகாஷ் 1952- - 1955 வரை பதவி வகித்தார். அதன்பின், 1956ல் டில்லி சட்டசபை கலைக்கப்பட்டது. கடந்த 1966ம் ஆண்டு டில்லி பெருநகர கவுன்சில் நிறுவப்படும் வரை ஜனாதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டில் தலைமை ஆணையர்தான் டில்லியை நிர்வாகம் செய்து வந்தார்.

3.44 லட்சம் கிலோ பட்டாசு பறிமுதல்

தேசிய தலைநகர் பிராந்தியத்தின் காஜியாபாத் அருகே, போஜ்பூரில் இரண்டு கிடங்குகளில் போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில், 6.25 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.44 லட்சம் கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு கிடங்குகளுக்கும் சீல் வைக்கப்பட்டு, அதன் உரிமையாளர் சவுரப் சிங்கால், ஊழியர்கள் தரம்வீர் மற்றும் அமித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காஜியாபாத் மாவட்டத்தில் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் அக்டோபர் 24ம் தேதி வரை பட்டாசு சேமித்து வைப்பது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Chess Player
அக் 12, 2025 08:45

எப்போதெல்லாம் ஹிந்து பண்டிகை வருகிறது அப்போது மட்டும் தான் மாசு கட்டுப்பாடு. வாஹனம் ஓட்டுவதை வாரம் சில நாட்கள் நிறுத்துங்கள் - ரயில் பஸ் போக்குவரத்தை தரமாக உயர்த்துங்கள் இத விட்டுபுட்டு , வருஷத்துக்கு ஓரு முறை கொண்டாடற வெடி வேண்டாம் சொல்லுவானுக. நமது கலாச்சாரத்தை அழிக்க வருவனுக


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை