கைது பயத்தில் ஊரை விட்டு வெளியேறிய வாலிபர் மரணம்
மாண்டியா: நாகமங்களா கலவரத்தில் கைது பயத்தால், ஊரை விட்டு வெளியேறிய வாலிபர் திடீரென இறந்தார்.மாண்டியா நாகமங்களாவில் 11ம் தேதி இரவு, விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்டது. இந்த தொடர்பாக 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைதுக்கு பயந்து சில வாலிபர்கள் ஊரை விட்டு வெளியேறினர்.கலவர வழக்கில் கிரண், 28 என்ற வாலிபரின் தந்தை குமாரும் கைது செய்யப்பட்டார். தன்னையும் போலீசார் கைது செய்வர் என்ற பயத்தில், கிரண் ஊரை விட்டு வெளியேறினார். அவருக்கு மூளை பக்கவாத நோயும் இருந்தது.அவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இந்நிலையில் கலவர வழக்கில் ஏ1 ஆக இருந்த கிரண் இறந்து விட்டார் என சமூக வலைதளங்களில் சிலர் தகவல் பரப்பினர். ஆனால் மாண்டியா எஸ்.பி., மல்லிகார்ஜுன் பாலதண்டி மறுத்து உள்ளார். உயிரிழந்த கிரணுக்கும், கலவரத்திற்கும் தொடர்பு இல்லை என கூறியுள்ளார்.