உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடவுள் சிலைகளை உருவாக்கும் பெண்

கடவுள் சிலைகளை உருவாக்கும் பெண்

பொதுவாக கைவினை கலை பொருட்களை தயாரிப்பதில், ஆண்களே கை தேர்ந்தவர்கள் என்ற கருத்து உண்டு. ஆனால் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை, பலரும் நிரூபித்துள்ளனர்.கர்நாடகாவில் பெண்கள் சம்பந்தப்பட்ட பண்டிகைகளுக்கு பஞ்சமில்லை. நாகர பஞ்சமி, கவுரி விரதம், வரமஹாலட்சுமி விரதம் என பல்வேறு பண்டிகைகள் உள்ளன. இத்தகைய பண்டிகைகளுக்கு, கவுரி சிலை, லட்சுமி வைத்து பூஜிப்பர். கவுரி, லட்சுமி உட்பட, மற்ற கடவுள்களின் உருவச்சிலைகளை உருவாக்குவது ஒரு கலையாகும். பொதுவாக இந்த கலை ஆண்களுக்கு மட்டும் வரும் என, பலரும் கருதுவர். ஆனால் தன்னாலும் முடியும் என்பதை, ஒரு பெண் நிரூபித்துள்ளார்.

குலத்தொழில்

பல்லாரியை சேர்ந்தவர் சம்பத் லட்சுமி, 48. இவர் திருமணமான பின், கொப்பால், கனககிரிக்கு கணவர் வீட்டுக்கு வந்தார். இவரது கணவர் நரசிம்ம சித்ரகாரா குடும்பத்தினருக்கு, மரக்கட்டைகள் பயன்படுத்தி கடவுள் சிலைகளை உருவாக்குவது குலத்தொழிலாகும். இந்த கலையை, கணவர் நரசிம்ம சித்ரகாரா, மாமியார் ரேணுகம்மாவிடம் சம்பத் லட்சுமி கற்றுக்கொண்டார். இப்போது அவருக்கு கைவந்த கலையாகி உள்ளது.கவுரி சிலைகள் மட்டுமின்றி, விநாயகர், குடை, சாமரம், துர்கம்மா, கெஞ்சம்மா, தாமம்மா என, பல கடவுள்கள், இவர் கை வண்ணத்தில் மிக அற்புதமாக உருவாகின்றன. குழந்தைகள் விளையாடும் வண்டி, காளைகள், சாண பொம்மை என, பலவிதமான கைவினை பொருட்களை உருவாக்குவதில் கை தேர்ந்தவர்.இவர் தயாரிக்கும் கைவினை பொருட்களுக்கு, மாநிலம் முழுதும் அதிக மவுசு உள்ளது. அவருக்கு நல்ல பெயரும் கிடைத்துள்ளது. ஏரி மண், புற்று மண் பயன்படுத்தி பொருட்கள், கடவுள் சிலைகளை உருவாக்குகிறார்.புளியங்கொட்டைகளை பொடியாக்கி, நீரில் ஊற வைக்கிறார். அதன்பின் இதை கிரைண்டரில் அரைத்து, பேஸ்ட் போன்று தயாரிக்கிறார். இந்த கலவை, மரத்துாள், சணல் கயிறு, மரக்குச்சிகளை வைத்து விதவிதமான சிலைகளை தயாரிக்கிறார். இவற்றின் மீது கலர், கலரான துணிகளை ஒட்டி, பொம்மைகள் தயாரிக்கிறார். அதன்பின் வர்ணம் தீட்டுகிறார்.

நல்ல லாபம்

சம்பத் லட்சுமி குடும்பத்தினர் தயாரிக்கும் கடவுள் சிலைகள், கைவினை கலை பொருட்களுக்கு, நல்ல, 'டிமாண்ட்' உள்ளது. கர்நாடகாவின் பெங்களூரு, பல்லாரி, ராய்ச்சூர், ஆந்திராவின் அனந்தபூர், விஜயவாடா, ஹைதராபாத், மந்த்ராலயா என, பல்வேறு இடங்களில் இவர்களின் தயாரிப்புகள் விற்பனையாகின்றன. விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு, விநாயகர், கவுரி சிலைகள் விற்பனை அமோகமாக நடக்கும். இவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.சம்பத் லட்சுமியின் திறமையை அடையாளம் கண்டு, பல்வேறு தொண்டு அமைப்புகள், சங்கங்கள் அவரை பாராட்டி கவுரவித்துள்ளனர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை