உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாதஸ்வரம் வாசித்து குடும்பத்தை காப்பாற்றும் பெண்

நாதஸ்வரம் வாசித்து குடும்பத்தை காப்பாற்றும் பெண்

பொதுவாக ஹிந்துக்கள் வீட்டில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளில் மேளம், நாதஸ்வரம் கண்டிப்பாக இருக்கும். தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வர வித்வானாக நடித்த சிவாஜி கணேசன் நாதஸ்வரத்தில் வாசிக்கும் நலம் தானா.... நலம் தானா... உடலும் உள்ளமும் நலம் தானா என்ற பாடல் இன்று வரை பட்டி தொட்டி எங்கும் ஒலித்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில், கர்நாடகா தலைநகரான பெங்களூருக்கு மிக அருகில் உள்ள சிக்கபல்லாபூரில் பெண் நாதஸ்வர கலைஞர் ஒருவர் தனது வாசிப்பு கலை மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். அவரைப் பற்றி பார்க்கலாம். சிக்கபல்லாபூர் மாவட்டத்தின் பாகேபள்ளி டவுனில் பத்தாவது வார்டில் வசிப்பவர் கணேஷ். முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா. ஆந்திர மாநிலம், நல்லசரவு மண்டலத்தின் யரகண்டிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. குடும்ப நிர்வாகம், குழந்தைகளின் படிப்பு என குடும்பத்தில் அதிக பண செலவு ஏற்பட்டது. கணேஷ் வருமானத்தை நம்பி மட்டுமே குடும்பம் இயங்கியது. இதனால் கணவருக்கு உதவியாக இருக்கும் வகையில் நாதஸ்வரம் வாசிக்கும் தொழில் செய்ய வேண்டும் என்று கவிதா ஆசைப்பட்டார். இதற்கு கணவரும் சம்மதம் தெரிவித்தார். ஆந்திராவின் முத்துாரில் உள்ள பிரபல நாதஸ்வர வித்வான் கோபாலப்பாவிடம் பயிற்சி பெற்றார். கடந்த 2008ம் ஆண்டில் கவிதா, தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் முதல் முறை நாதஸ்வரம் வாசித்தார். அருமையாக இருந்தது என்று அனைவரும் பாராட்டினர். பின், சுப நிகழ்ச்சிகள், கச்சேரிகளில் பங்கேற்று வாசிக்க ஆரம்பித்தார். பாகேபள்ளி, துமகூரு, பல்லாரி, பெங்களூரு, மைசூரு, திருப்பதி, கதிரி, தர்மாவரம் ஆகிய இடங்களில் நடக்கும் பல்வேறு சுப நிகழ்ச்சிகளிலும் நாதஸ்வரத்தை வாசித்து அசத்தினார். தற்போது பாகேபள்ளியில் இந்த சுப நிகழ்ச்சி நடத்தினாலும், கவிதா நாதஸ்வரம் இல்லாமல் இருக்காது. பல்வேறு கச்சேரிகளில் பங்கேற்று சிறந்த நாதஸ்வர வித்வான் விருது வாங்கி உள்ளார். கவிதா கூறுகையில், ''குடும்பத்தின் பொருளாதார நிலை சரியில்லாத காரணத்தால் நாதஸ்வரம் வாசிக்க வந்தேன். எங்களைப் போன்று கஷ்டப்படும் நாதஸ்வர வித்வான்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டி தர வேண்டும். பெண்கள் மனது வைத்தால் எதையும் சாதிக்க முடியும்,'' என்றார் -- நமது நிருபர்- -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ