உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண் உயிரை காக்க 400 கி.மீ., பயணித்து ரத்த தானம் அளித்த இளைஞர்

பெண் உயிரை காக்க 400 கி.மீ., பயணித்து ரத்த தானம் அளித்த இளைஞர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்துார் :அரிதிலும் அரிதாக கருதப்படும், 'பாம்பே குரூப்' ரத்தம் தேவைப்பட்ட பெண்ணுக்கு, மஹாராஷ்டிராவின் ஷிர்டியில் இருந்து இந்துாருக்கு, 400 கி.மீ., பயணித்து, இளைஞர் ஒருவர் ரத்த தானம் அளித்து உயிரை காப்பாற்றியுள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் இந்துாரைச் சேர்ந்த பெண்ணுக்கு, சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருடைய ரத்த வகை, 'ஓ பாசிடிவ்' என்று கருதி, அறுவை சிகிச்சையின்போது, ஓ பாசிடிவ் ரத்தம் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்துாரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான், அவருக்கு மிகவும் அரிதான பாம்பே குரூப் ரத்த வகை இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த வகை ரத்தத்தை பெறுவதற்கான முயற்சிகள் நடந்தன.வாட்ஸாப் வாயிலாக இதை தெரிந்து கொண்ட, மஹாராஷ்டிர மாநிலம் ஷிர்டியைச் சேர்ந்த, அலங்கார மலர்களை விற்கும் ரவிந்திர அஸ்தேகர், 36, நண்பரின் உதவியுடன் காரில் பயணித்தார். 400 கி.மீ., துார பயணத்துக்குப் பின், அவரிடம் இருந்து, பாம்பே குரூப் ரத்தம் பெறப்பட்டு, அந்த பெண்ணுக்கு செலுத்தப்பட்டது. சரியான நேரத்தில் சரியான ரத்தம் கிடைத்ததால், அந்த பெண் உயிர் தப்பினார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தனக்கு மிகவும் அரிதான பாம்பே குரூப் ரத்தம் இருப்பதை தெரிந்து கொண்ட அஸ்தேகர், 10 ஆண்டுகளில் எட்டுமுறை, தேவைப்படுவோருக்கு தானமாக அளித்துள்ளதாக கூறிஉள்ளார்.'தவறான ரத்தம் கொடுக்கப்பட்டதால், வழக்கமாக, ஒரு டெசிலிட்டரில், 12 முதல் 15 வரை இருக்க வேண்டிய ஹிமோகுளோபின், இந்த பெண்ணுக்கு, நான்காக குறைந்து விட்டது. மிகவும் சிக்கலான கட்டத்தில் அவர் இருந்தார். 'அவருடைய சிறுநீரகமும் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. சரியான நேரத்தில் ரத்தம் கிடைத்ததால், அவர் உயிர் தப்பியதுடன், நலமாகி வருகிறார்' என, அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் கூறினர்.அந்தப் பெண்ணுக்கு தேவைப்பட்ட, நான்கு யூனிட் ரத்தத்தில், இரண்டு யூனிட்கள், மஹாராஷ்டிராவின் நாக்பூரில் இருந்து விமானம் வாயிலாக வரவழைக்கப்பட்டது. இந்துாரிலேயே உள்ள அவருடைய சகோதரி, ஒரு யூனிட் ரத்தம் கொடுத்தார்.

அது என்ன பாம்பே குரூப்?

நம் ரத்தத்தின் வகைகளில், ஏ, பி, ஓ மற்றும் ஏபி ஆகிய வகைகள்தான் பெரும்பாலும் எல்லாருக்கும் தெரிந்தவை. பாம்பே குரூப் என்பது மிகவும் அபூர்வமானது. இரண்டரை லட்சம் பேரில் ஒருவருக்குத்தான் இந்த ரத்த வகை இருக்கும். கடந்த, 1952ல், டாக்டர் பெண்டே என்பவரால், பாம்பேயில் இந்த ரத்த வகை கண்டறியப்பட்டது. அதையடுத்து இதற்கு, பாம்பே குரூப் என்று பெயரிடப்பட்டது. வழக்கமாக ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜென்களும், பிளாஸ்மாவில் ஆன்டி பாடீசும் இருக்கும். இதனடிப்படையில் தான், ஒருவருடைய ரத்த வகை கண்டறியப்படுகிறது.மற்ற அனைத்து ரத்த வகைகளிலும், இவை இரண்டும் இருக்கும். ஆனால், பாம்பே ரத்த வகையில், ஆன்டிஜென்கள் இருக்காது. ஆன்டி பாடீஸ் மட்டுமே இருக்கும். அதனால், இதை, ஓஎச் என்றும், எச்எச் என்றும் வகைப்படுத்தியுள்ளனர். சாதாரண ரத்தப் பரிசோதனையில் இது தெரியவராது. பிளாஸ்மா சோதனையில் தான் தெரிய வரும்.அதனால், இந்த ரத்த வகை உள்ளவர்களுக்கு, இதுபோன்ற ரத்த வகை உள்ளவர்களின் ரத்தம் மட்டுமே செலுத்த முடியும்.இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஈரானில் மட்டுமே இந்த வகை ரத்தம் காணப்படுகிறது. நம் நாட்டில் மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டுமே இந்த வகை ரத்தம் உள்ளவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்திலும், ஒரு சிலருக்கு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
மே 30, 2024 10:33

குருதிக்கொடை கோடி புண்ணியம்.


duruvasar
மே 30, 2024 09:56

இப்படி நல்ல ஆத்மாக்களும் இருக்கிறார்கள். நீடூழி வாழ்க.


Kasimani Baskaran
மே 30, 2024 08:16

இரவீந்திரனுக்கு பாராட்டுகள் ?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி