உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிரட்டி பணம் பறிக்கும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., பா.ஜ., பகீர் குற்றச்சாட்டு

மிரட்டி பணம் பறிக்கும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., பா.ஜ., பகீர் குற்றச்சாட்டு

புதுடில்லி:“ரவுடி உதவியுடன், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., பணம் பறித்தார்,” என, பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ரவுடி ஒருவருடன் எம்.எல்.ஏ., பேசியதாக கூறப்படும் 'ஆடியோ'வையும் வெளியிட்டனர்.இதுகுறித்து, பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா ஆகியோர், நிருபர்களிடம் கூறியதாவது:தலைநகர் டில்லியில் சட்டம்- - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசு மீது குற்றம் சாட்டுகிறார். ஆனால், அக்கட்சியின் எம்.எல்.ஏ., ரவுடி ஒருவருடன் பேசிய உரையாடலை கேளுங்கள். அந்த எம்.எல்.ஏ.,தான், ரவுடியுடன் இணைந்து தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கிறார். இதற்காக, அந்த எம்.எல்.ஏ.,.வை அரவிந்த் கெஜ்ரிவாலும், முதல்வர் ஆதிஷியும் நீக்குவார்களா?விரைவில் நடக்க இருக்கும் சட்டசபைத் தேர்தலில் தோற்று விடுவோம் என்பதை உணர்ந்த ஆம் ஆத்மி, மத்திய அரசு மீதும், பா.ஜ., மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. தேர்தலில் தோற்பது மட்டுமின்றி, எதிர்கட்சி அந்தஸ்து கூட ஆம் ஆத்மிக்கு கிடைக்காது.இவ்வாறு அவர்கள் கூறினர்.ரவுடி ஒருவருடன் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., பேசியது போன்ற ஆடியோவை, வீரேந்திர சச்தேவா தன் மொபைல் போனில் இருந்து நிருபர்களுக்கு ஒலிபரப்பிக் காட்டினார்.பா.ஜ., தகவல் தொழில் நுட்பத் துறை பிரிவு தலைவர் அமித் மாளவியா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“ டில்லியில் தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலை ஆம் ஆத்மிதான் செய்து வருகிறது. மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை அரவிந்த் கெஜ்ரிவால் நடத்தி வருகிறார். ஊழலின் கிடங்காக டில்லியை ஆம் ஆத்மி மாற்றி விட்டது,”என, கூறியுள்ளார்.

மறுப்பு

இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் சிங், “போலியான ஆடியோவை பா.ஜ., வெளியிட்டுள்ளது. டில்லியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளைதை மறைக்க பா.ஜ.,வும் அமித்ஷாவும் இணைந்து இதுபோன்ற போலி ஆடியோ நாடகத்தை நடத்துகின்றனர்,”என்றார்.தலைநகர் டில்லியில் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், நாட்டின் தலைநகரான டில்லியை ரவுடிகளின் தலைநகராக மத்திய அரசு மாற்றி விட்டது என கெஜ்ரிவால் நேற்று முன் தினம் குற்றம் சாட்டியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி