ஆம் ஆத்மி எம்.பி., வீடுகளில் அமலாக்க துறை அதிரடி ரெய்டு
ஜலந்தர்: நில முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சீவ் அரோராவின் வீடு உட்பட, அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் சஞ்சீவ் அரோரா, 61. இவர், அக்கட்சியின் ராஜ்யசபா உறுப்பினராகவும் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பஞ்சாப் அரசு சார்பில் லுாதியானாவில் தொழில் நிறுவனத்திற்காக நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலத்தை, சஞ்சீவ் அரோரா முறைகேடாக பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களை கட்டியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, சஞ்சீவ் அரோரா மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை மோசடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து, லுாதியானாவில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.இதேபோல் ஹரியானா, டில்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இதுதவிர சஞ்சீவ் அரோராவின் ரியல் எஸ்டேட் பங்குதாரர்களான ஹேமந்த் சூத், சந்திரசேகர் அகர்வால் ஆகியோரின் வீடுகள் உட்பட 17 இடங்களில், அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.இதற்கிடையே, ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டில்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, அமலாக்கத் துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.