கெஜ்ரிவாலை கொல்ல மத்திய அரசு சதி தேர்தல் ஆணையத்துக்கு ஆம் ஆத்மி கடிதம்
புதுடில்லி:'முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல மத்திய அரசும், டில்லி போலீசும் சதி செய்கின்றன' என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.டில்லி முதல்வர் ஆதிஷி சிங், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர், நிருபர்களிடம் கூறியதாவது:ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் போலீஸ் வழங்கியிருந்த பாதுகாப்பு, மத்திய அரசு மற்றும் டில்லி மாநகரப் போலீஸ் அளித்த நெருக்கடியால் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவுப்படி, டில்லி போலீஸ் கெஜ்ரிவாலுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவில்லை. அவரைக் கொல்ல மத்திய அரசும், டில்லி போலீசும் சதி செய்கின்றன. கெஜ்ரிவால் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியவர்கள் பா.ஜ.,வினர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. ஆனால், டில்லி போலீசார் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.டில்லி மாநகரப் போலீஸ் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்டுப்பாட்டில் இருப்பதால் நாங்கள் அதை நம்பவில்லை. டில்லி சட்டசபைத் தேர்தலில் பா.ஜ., அநாகரீகமான அரசியல் செய்வதுடன் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்டு இருந்த பாதுகாப்பையும் அகற்றியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.