உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அபிஷேக் உள்ளே... யூசுப் பதான் வெளியே; மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி

அபிஷேக் உள்ளே... யூசுப் பதான் வெளியே; மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொல்கட்டா: வெளிநாடுகளுக்கு செல்லும் எம்.பி.,க்கள் குழுவில் இருந்து, திரிணமுல் காங்., - எம்.பி., யூசுப் பதான் விலகிய நிலையில், அவருக்கு பதில், அக்கட்சியின் மற்றொரு எம்.பி.,யும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி சேர்க்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை தொடர்ந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான நம் நாட்டின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்கவும், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவுகளை அம்பலப்படுத்தவும், ஏழு எம்.பி.,க்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சமாதானம்

காங்., - எம்.பி., சசி தரூர், தி.மு.க., - எம்.பி., கனிமொழி, ஐக்கிய ஜனதா தள எம்.பி., சஞ்சய் குமார் ஜா, பா.ஜ., - எம்.பி.,க்கள் ரவிசங்கர் பிரசாத், வைஜயந்த் பாண்டா, தேசியவாத காங்., சரத் பவார் பிரிவு எம்.பி., சுப்ரியா சுலே, சிவசேனா எம்.பி., ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களில், அனைத்து கட்சிகளைச் சேர்ந்த 6 - 7 எம்.பி.,க்கள் வரை இடம் பெற்றுள்ளனர். சஞ்சய் குமார் ஜா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், திரிணமுல் காங்., - எம்.பி.,யும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான யூசுப் பதான் இடம் பெற்றிருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, 'எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட கட்சி தலைமையிடம் மத்திய அரசு கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். தன்னிச்சையாக முடிவு எடுத்ததை ஏற்க முடியாது' என்றார். இதையடுத்து, வெளிநாடுகளுக்கு செல்லும் குழுவில் இருந்து யூசுப் பதான் வெளியேறினார். இதற்கிடையே, பா.ஜ., மூத்த தலைவரும், பார்லி., விவகார அமைச்சருமான கிரண் ரிஜிஜு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தொலைபேசியில் அழைத்து சமாதானம் செய்ததாகவும், திரிணமுல் காங்., சார்பில் எம்.பி., பெயரை பரிந்துரைக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும், அப்போது, அபிஷேக் பானர்ஜியின் பெயரை மம்தா பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது.

பரிந்துரை

இந்நிலையில், வெளிநாடுகளுக்கு செல்லும் எம்.பி.,க்கள் குழுவில், அபிஷேக் பானர்ஜியின் பெயரை முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பரிந்துரை செய்தார். சஞ்சய் குமார் ஜா தலைமையிலான குழுவில், யூசுப் பதானுக்கு பதில், அவர் இடம் பெறுவார் என, கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை