தலைமறைவாக இருந்த சீரியல் கில்லர் சிக்கினான்
புதுடில்லி:தொடர் கொலைகள் செய்து உடல்களை முதலைகளுக்கு வீசிய ஏழு வழக்குகளில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த போது, பரோலில் சென்று தலைமறைவான, ஆயுர்வேத டாக்டர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.டில்லியை சேர்ந்த ஆயுர்வேத டாக்டர் தேவேந்தர் சர்மா,67. டில்லி, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் 2002 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், டாக்ஸி மற்றும் லாரி டிரைவர்களை கொலை செய்து, உடல்களை முதலைகளுக்கு உணவாக வீசினார்.ஏழு தனித்தனி வழக்குகளில் தேவேந்தர் சர்மாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஹரியானா மாநிலம் குருகிராம் நீதிமன்றம் தேவேந்தருக்கு மரண தண்டனையும் விதித்தது.டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட தேவேந்தர், 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பரோலில் சென்று தலைமறைவானார்.தேவேந்தர் சர்மா மீது, மொத்தம் 27 கொலை, கடத்தல் மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த 1995ம் ஆண்டில் இருந்து 2004ம் ஆண்டு வரை, சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சிகிச்சையும் செய்தார். தலைமறைவான சர்மா, ராஜஸ்தான் மாநிலம் தவுசாவில் உள்ள ஒரு ஆசிரமத்தில் துறவி வேடம் பூண்டு வசித்து வந்தார்.அலிகார், ஜெய்ப்பூர், டில்லி, ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல இடங்களில் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், ராஜஸ்தான் மாநிலம் தவுசா ஆசிரமத்தில் தேவேந்திர சர்மா இருப்பதைக் கண்டுபிடித்தனர்.ராஜஸ்தான் சென்ற தனிப்படை போலீசார், தேவேந்தர் சர்மாவை சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.ஏற்கனவே, 2020ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி 20 நாள் பரோலில் சென்ற சர்மா தலைமறைவானார். ஜூலை மாதமே டில்லியில் சிக்கினார். அதேபோல, 2023ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டு மாதங்கள் பரோல் வழங்கப்பட்டது. ஆனால், மீண்டும் ஆஜராகாமல் தலைமறைவானார்.