பயங்கரவாதிகளுக்கு வெள்ளைக்கொடி காட்டியதாக குற்றச்சாட்டு!: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி சரமாரி புகார்
ஜம்மு: “எல்லை கடந்த பயங்கரவாதத்தால், ஜம்மு - காஷ்மீர் கடுமையாக பாதிக்கப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வெள்ளைக்கொடியை காட்டியது. ஆனால், பயங்கரவாதிகளின் ஒவ்வொரு குண்டுக்கும், நாங்கள் குண்டுகளால் பதிலளித்து பணிய வைத்தோம்,” என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.ஜம்மு - காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இங்குள்ள, 40 தொகுதிகளுக்கு மூன்றாவது மற்றும் கடைசி கட்டமாக, அக்., 1ல் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரம் இன்றுடன் முடிகிறது. இந்நிலையில், ஜம்முவில் நேற்று நடந்த பா.ஜ., பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் ஜம்மு - காஷ்மீர் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தங்களுடைய குடும்பங்களை வளர்ப்பதிலேயே அக்கறை காட்டி வந்தன; மக்களை மறந்துவிட்டன. ஓட்டு வங்கி
இந்த கட்சிகள், அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை புறக்கணித்தன. ஆனால், சிறப்பு அந்தஸ்தை நீக்கி, ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வழி ஏற்படுத்திஉள்ளோம்.இங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை, மக்களை வெறும் ஓட்டு வங்கியாகவே பார்த்தன. அதனால் தான், எல்லை தாண்டி நடந்த வன்முறைகள், பயங்கரவாதத்தை கண்டுகொள்ளாமல் இருந்தன. அவர்கள், பயங்கரவாதிகளுக்கு வெள்ளைக் கொடியை காட்டி வந்தனர்.கடந்த 2016ல், இதே செப்., 28ம் தேதி நடந்தது உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். அந்த நாளில் தான் பயங்கரவாதிகள் மீது, அவர்களுடைய இடத்துக்கே சென்று துல்லிய தாக்குதலை நடத்தினோம். அவர்களுடைய ஒவ்வொரு தோட்டாவுக்கும், குண்டுகளால் பதிலளித்தோம். எங்கள் மீது கண் வைத்தாலே, பதிலடி கொடுப்போம் என்பதை இந்த உலகுக்கு காட்டினோம். நம்பிக்கை
ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஊழல், வேலையில் பாகுபாடு, பயங்கரவாதம், பிரிவினைவாதம், ரத்தக்களறியை விரும்பவில்லை. அவர்கள் அமைதியையும், தங்கள் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தையும் விரும்புகின்றனர். அதுபோல, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை அவர்கள் விரும்பவில்லை. பா.ஜ., மீது அவர்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. முதல் இரண்டு கட்டத் தேர்தல்கள் இதை உணர்த்துவதாக உள்ளன.ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது தற்காலிக நடவடிக்கையே. இங்கு பா.ஜ., ஆட்சி அமைந்ததும், மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கும்.இவ்வாறு அவர் பேசினார்.