பல்லாரி: “சுயமரியாதைக்கு களங்கம் ஏற்பட்டால் கட்சியில் இருந்து விலகுவேன்,” என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு அறிவித்துள்ளார்.பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு. 2023 சட்டசபை தேர்தலில், பல்லாரி ரூரல் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். இதையடுத்து கடந்த ஆண்டு நடந்த சண்டூர் - தனி சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டினார். தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொகுதியை வலம் வந்தார். ஆனால் கடைசி நேரத்தில் பங்காரு ஹனுமந்த் என்பவருக்கு மேலிடம் வாய்ப்பு அளித்தது.காங்கிரஸ் வேட்பாளர் அன்னபூர்ணாவுக்கு கடும் போட்டி அளித்த பங்காரு ஹனுமந்த் 8,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். இந்நிலையில், 'என் தோல்விக்கு ஸ்ரீராமுலுவும் ஒரு காரணம். அவர் எனக்கு ஆதரவாக சரியாக பணியாற்றவில்லை' என, மேலிட தலைவர்களிடம் பங்காரு ஹனுமந்த் புகார் அளித்துள்ளார்.நேற்று முன்தினம் மேலிட பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ் அகர்வால் தலைமையில் நடந்த கோர் கமிட்டி கூட்டத்தின்போது, பங்காரு ஹனுமந்த் அளித்த புகார் பற்றி, ஸ்ரீராமுலுவிடம், ராதாமோகன் தாஸ் அகர்வால் கேள்வி எழுப்பினார்.இதனால் கோபம் அடைந்த ஸ்ரீராமுலு, 'இடைத்தேர்தலில் பங்காரு ஹனுமந்த் வெற்றிக்கு என்னால் முடிந்த அளவுக்கு கடுமையாக உழைத்தேன். நேர்மையாக வேலை செய்பவர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை' என்று கூறியுள்ளார்.கோர் கமிட்டி முடிந்ததும் இந்த விஷயம் பற்றி ஊடகத்தினரிடம் பேச ஸ்ரீராமுலு முயன்றார். அவரை எம்.எல்.சி., ரவி சமாதானம் செய்து அழைத்துச் சென்றார்.இந்நிலையில், ஸ்ரீராமுலு நேற்று அளித்த பேட்டி:சண்டூர் இடைத்தேர்தலில் தோற்றதற்கு நான் தான் காரணம் என, என்னிடம் ராதாமோகன் தாஸ் அகர்வால் நேரடியாக கூறினார். வேட்புமனுத் தாக்கல் செய்த நாளில் இருந்து, பிரசாரத்தின் கடைசி நாள் வரை, விஜயேந்திராவுடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்டேன்.'தொகுதியில் யாரிடம் சென்று கேட்டாலும், நான் எப்படி வேலை செய்தேன் என்பது தெரியும்' என அவரிடம் கூறினேன். ஆனாலும் அவர் ஏற்க மறுத்தார். 'யாருடைய பேச்சை கேட்டுக் கொண்டு, இப்படி பேசுகிறீர்கள்?' என்று கேட்டேன். 'தேர்தல் அரசியல் என்றால், ஒருவர் தோற்க வேண்டும்; ஒருவர் வெற்றி பெற வேண்டும். இது தான் விதி. தோற்று போனதற்காக என்னை கீழ்த்தரமாக பேசுவது சரியில்லை' என்று அவரிடம் கூறினேன்.'உங்களுடன் இணைந்து தானே நான் பணியாற்றினேன். மேலிட பொறுப்பாளர் உத்தர பிரதேசத்தில் இருந்து வந்தவர். இங்கு நடப்பது பற்றி அவருக்கு தெரியாது. நான் செய்த பணிகள் பற்றி நீங்கள் கூறுங்கள்' என, விஜயேந்திராவிடமும் கூறினேன். ஆனால், அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.ஜனார்த்தன ரெட்டி பேச்சை கேட்டு, என் மீது குற்றஞ்சாட்டுகின்றனர். 'உங்களால் கட்சிக்கு நஷ்டம் ஏற்படுகிறது' என, யாராவது என்னிடம் கூறினால், 'கட்சியை விட்டு விலகவும் தயார்' என கோர் கமிட்டி கூட்டத்தில் கூறினேன்.என் வாழ்நாளில் இவ்வளவு மோசமான அனுபவத்தை நான் சந்தித்தது இல்லை. மீண்டும் கட்சியில் இணைந்த பின், தான் சொல்கிறபடி தான் நடக்க வேண்டுமென, ஜனார்த்தன ரெட்டி நினைக்கிறார். கட்சி சொல்வதை கேட்டு நாங்கள் நடந்ததால், என் மீது அவருக்கு கோபம். என்னை அரசியல் ரீதியாக முடிக்க நினைக்கிறார். ஜனார்த்தன ரெட்டி கட்சிக்கு வந்தால், நல்லது என்று கூறியவன் நான் தான்.தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் பிரச்னை இல்லை. என் இதயத்தில் ஈட்டியால் குத்தி உள்ளனர். சுயமரியாதைக்கு களங்கம் ஏற்பட்டால் கட்சியை விட்டு விலகுவேன். விலகுவதற்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., அமைப்பு செயலர் சந்தோஷிடம் சென்று கூறுவேன்.எனக்கு நேர்ந்த அவமானத்தை பற்றி, சந்தோஷிடம் மொபைல் போனில் கூறினேன். அவர் எனக்கு ஆறுதல் கூறினார். ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் சிலரிடமும் பேசி உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.ஸ்ரீராமுலு, வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கென பல்லாரி, விஜயநகரா, கொப்பால், ராய்ச்சூரு ஆகிய மாவட்டங்களில் தனி செல்வாக்கு உள்ளது. ஒருவேளை இவரை பகைத்துக் கொண்டால், வடமாவட்டங்களில் வால்மீகி சமூக ஓட்டுகள் பா.ஜ.,வுக்கு கிடைக்காமல் போகலாம். ஏற்கனவே வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளியை, விஜயேந்திரா பகைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.