| ADDED : ஜன 23, 2025 01:57 AM
போபால் : பாலிவுட் நடிகர் சயீப் அலிகானின் மூதாதையரான பட்டோடி குடும்பத்தின், 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் தொடர்பான வழக்கில் அரசு கையகப்படுத்துவதற்கு சாதகமான தீர்ப்பை மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.போபாலின் கடைசி நவாப் ஹமீதுல்லா கானுக்கு மூன்று மகள்கள். அதில் மூத்தவர், அபிதா சுல்தான். இவர் 1950ல் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார்.அரசுக்கு சொந்தம்இரண்டாவது மகள், சஜிதா சுல்தான். இந்தியாவில் தங்கி, நவாப் இப்திகார் அலி கான் பட்டோடியை மணந்து, சட்டப்பூர்வ வாரிசு ஆனார்.சஜிதாவின் பேரன் சயீப் அலி கான். இவரும் பட்டோடி குடும்பத்தின் வாரிசு. இந்த குடும்பத்திற்கு போபால், ஆமதாபாத் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் அரண்மனை, பங்களா என 15,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் உள்ளன. இருப்பினும் அபிதா சுல்தான் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்ததால், இந்த சொத்துக்களை எதிரி சொத்து என அரசு வகைப்படுத்தியது. பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்த தனிநபர்களின் சொத்துக்களை, மத்திய அரசு உரிமை கோருவதற்கு எதிரி சொத்து சட்டம் அனுமதிக்கிறது. இதன் அடிப்படையில் போபாலில் உள்ள நவாபின் சொத்துக்கள் அரசுக்கு சொந்தம் என, 2015ல் அறிவிக்கப்பட்டன.மேல்முறையீடுஇதை எதிர்த்து பட்டோடி குடும்பத்தினரான சயீப் அலிகான், அவரின் தாயார் ஷர்மிளா தாகூர், சகோதரிகள் சோஹா அலி கான் மற்றும் சபா அலி கான் உள்ளிட்டோர் நீதிமன்றத்தை நாடினர். 2019ல், நீதிமன்றம் சயீப் அலிகானின் பாட்டி சஜிதா சுல்தானை சட்டப்பூர்வ வாரிசாக அங்கீகரித்தது. இதனால் அவரின் வாரிசுகளுக்கும் சொத்தில் பங்கு உறுதியானது.இந்நிலையில், இந்த சொத்துக்களை அரசு கையகப்படுத்த 2015ல் விதிக்கப்பட்ட தடையை மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் சமீபத்தில் நீக்கியது.இதனால் 15,000 கோடி ரூபாய் சொத்துக்கள் அரசு வசமாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இருப்பினும் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியும்.