நடிகை பாலியல் புகார்; நடிகர் சித்திக் கைது
திருவனந்தபுரம் : கேரளாவில் நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து, மலையாள நடிகர் சித்திக்கை அந்த மாநில போலீசார் நேற்று கைது செய்தனர். கேரளாவில் திரைத்துறையில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அமைக்கப்பட்ட 'ஹேமா' கமிட்டியின் விசாரணை அறிக்கை, கடந்த செப்டம்பரில் வெளியாகி மலையாள திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல நடிகையர் தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசினர். ஒரு சிலர், இது தொடர்பாக போலீசில் புகாரளித்தனர்.கடந்த 2016ல், மலையாள நடிகர் சித்திக், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை ரேவதி சம்பத் புகார் தெரிவித்தார். 'சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி ஹோட்டலில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார்' என, அவர் மீது திருவனந்தபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். இந்த விவகாரத்தில் முன்ஜாமின் கேட்டு சித்திக் தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து, தலைமறைவான அவர் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமின் பெற்றார். அவரது பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கக் கூறிய நீதிபதிகள், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு முன்ஜாமின் வழங்கியிருந்தனர். இந்நிலையில், திருவனந்தபுரம் போலீசார், நடிகர் சித்திக்கை நேற்று கைது செய்தனர். ஏற்கனவே, அவர் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றதால் மாலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.