வாக்குறுதி திட்டங்கள் குறித்து உரத்த குரலில் பேச அறிவுரை
பெங்களூரு: ''காங்கிரசின் வாக்குறுதி திட்டங்கள், மக்களின் உரிமை. இதை நாம் உரத்த குரலில் கூற வேண்டும்,'' என முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.பெங்களூரின், தனியார் ஹோட்டலில் நேற்று முன் தினம் இரவு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இதில், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:பா.ஜ., மற்றும் ம.ஜ.த.,வினர், வாக்குறுதி திட்டங்களின் 5 கோடி பயனாளிகளை நிரந்தரமாக அவமதிக்கின்றனர். நாம் மக்களுக்கு ஆதரவாக நின்றுள்ளோம். உண்மை நிரந்தரமாக இருக்கும். ஒவ்வொரு கிராமத்திலும், வாக்குறுதி திட்டங்கள் சென்றடைந்துள்ளன.இது பற்றி சட்டசபையில், நீங்கள் பெருமையுடன் பேச வேண்டும். காங்கிரசின் வாக்குறுதி திட்டங்கள், மக்களின் உரிமை. இதை நாம் உரத்த குரலில் கூற வேண்டும்.கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கட்டாயமாக, சட்டசபையில் ஆஜராக வேண்டும். சபையின் நேரத்தை அர்த்தமுள்ளதாக்க வேண்டும். பா.ஜ., தொடர்ந்து பொய்களை கூறி, உண்மையை மறைக்க முயற்சிக்கிறது. ஏனென்றால் லோக்சபா தேர்தலில், மக்களிடம் சென்று முகத்தை காண்பிக்க, பா.ஜ.,வுக்கு வளர்ச்சி பற்றிய விஷயங்களே இல்லை.கடந்த பத்து ஆண்டுகளில், வளர்ச்சியை மறந்து, வரும் லோக்சபா தேர்தலில், அயோத்தி ராமர் கோவிலை மட்டும் முன் வைத்து, பிரசாரம் செய்கின்றனர். இந்த உண்மை மக்களுக்கு புரிந்துள்ளது. சட்டசபையில் அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். இதற்கு சரியான புள்ளி, விபரங்களுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தக்க பதிலடி தர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.