உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர் இந்தியா விமானங்களை மேம்படுத்த ரூ.3,480 கோடியில் மறுசீரமைப்பு திட்டம்

ஏர் இந்தியா விமானங்களை மேம்படுத்த ரூ.3,480 கோடியில் மறுசீரமைப்பு திட்டம்

புதுடில்லி : 'ஏர் இந்தியா' நிறுவனம், 3,480 கோடி ரூபாய் மதிப்பிலான விமான மறுசீரமைப்பு திட்டங்களை துவங்கியுள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனம், விமானங்களின் சேவைகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளால் அடிக்கடி பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இதையடுத்து, விமான நிறுவனம் தன் வசமுள்ள பரந்த மற்றும் குறுகிய உடல் அமைப்பு கொண்ட விமானங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், அதன் உட்புறங்களில் தொழில்நுட்ப வசதிகளை மறுசீரமைக்கவும், 3,480 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை துவக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட 26 போயிங் பி787 - 8 ரக விமானங்களின் முதல் விமானம் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள 'போயிங்' விமான நிறுவனத்துக்கு கடந்த ஜூலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இரண்டாவது விமானத்தை அக்டோபர் மாதம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் இந்தாண்டு இறுதிக்குள் சீரமைக்கப்பட்டு சேவைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. பி787 - 8 ரக விமானங்களுக்கான மறுசீரமைப்பு திட்டம், அடுத்த இரண்டு ஆண்டுக்குள் நிறைவடையும். இதன்படி, வணிக வகுப்பு, பிரீமியம் எகானமி மற்றும் எகானமி வகுப்புகளுக்கு புதுப்பிக்கப்பட்ட உட்புறங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப அமைப்புகள் பொருத்தப்பட உள்ளன. மேலும், இந்த மறுசீரமைப்பு திட்டம் 777 - 300 இ.ஆர்., விமானங்களுக்கும் நீட்டிக்கப்படும் என அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது-.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ