மிக மோசமான நிலையில் காற்றின் தரம் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் துவக்கம்
விக்ரம்நகர்:காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு மாறிய நிலையில், 10, 12ம் வகுப்புகள் தவிர அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடங்கள் நடத்தும்படி, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.டில்லி உள்ளிட்ட தேசிய தலைநகர் பிராந்தியத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 275ஆக இருந்த காற்றின் தரக்குறியீடு புதன்கிழமை மாலை 6:00 மணிக்கு 396ஆக உயர்ந்தது. இது விரைவில் 400ஐ தாண்டும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுத்துறை கணித்தது.இதையடுத்து காற்றின் தரத்தை கட்டுப்படுத்தும் நான்காவது செயல் திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவித்தது. இதன்படி, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் நான்காம் கட்ட கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்தன.இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் மாநில கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியது. 10, 12ம் வகுப்புகளைத் தவிர அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.மறு அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறையை தொடரும்படி அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கல்வி இயக்குனரகம் கேட்டுக் கொண்டுள்ளது.நான்காம் கட்ட விதிகளின்படி, அனைத்து கட்டுமான நடவடிக்கைகளுக்கும் தடை, தேசிய தலைநகர் பிராந்தியத்துக்குள் டீசல் லாரிகள் நுழைவதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.