தொழில்நுட்பக்கோளாறு; 100க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, டில்லி விமான நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது; விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் சாப்ட்வேரில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணியில் இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, டில்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் பிற பகுதிகளில் இருந்து வந்து சேரும் 100க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.பயணிகளின் இந்த அசவுகரியத்திற்கு மன்னித்து விடுங்கள். விரைவில் கோளாறு சரி செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட விமான பயண நேர அட்டவணைகள் வெளியிடப்படும். எனவே, பயணிகள் அனைவரும் தங்களின் விமானப்பயணம் குறித்த விபரங்களை அறிய தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தெரிவித்தார். இதனிடையே, ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்; டில்லியில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அனைத்து விமானங்களின் புறப்பாடுகள், வருகைகள் தாமதமாகியுள்ளன. பயணிகள், spicejet.com/#status மூலம் தங்கள் விமானப் பயணம் குறித்த சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.