உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறையில் இரவை கழித்த அல்லு அர்ஜுன்

சிறையில் இரவை கழித்த அல்லு அர்ஜுன்

ஹைதராபாத், டிச. 15-தெலுங்கானாவில், புஷ்பா - 2 தி ரூல் திரைப்படத்தை பார்க்க வந்த பெண் ஒருவர், கூட்ட நெரிசலில் சிக்கி பலியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அப்படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன், உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியும் சிறையில் இரவுப் பொழுதை கழித்த நிலையில், நேற்று காலை சிறையிலிருந்து வெளியில் வந்தார். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், பிரபல நடிகர்கள் அல்லு அர்ஜுன், பகத் பாசில், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான புஷ்பா - 2 தி ரூல் என்ற படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், கடந்த 5ல் வெளியானது.

இடைக்கால ஜாமின்

இந்த படத்தின் சிறப்பு காட்சி, ஹைதராபாதில் உள்ள சந்தியா தியேட்டரில், கடந்த 4ம் தேதி இரவு திரையிடப்பட்டது. இதை பார்க்க ஏராளமானோர் தியேட்டரில் குவிந்தனர்.சிறப்பு காட்சியை பார்க்க, நடிகர் அல்லு அர்ஜுன் முன்னறிவிப்பின்றி வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, ரேவதி, 35, என்ற பெண் உயிரிழந்தார். இது தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரை, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, சஞ்சல்குடா சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த தெலுங்கானா உயர் நீதிமன்றம், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நான்கு வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது. இந்த உத்தரவின் நகல் கிடைக்கவில்லை எனக் கூறி, சிறையில் இருந்து நடிகர் அல்லு அர்ஜுனை விடுவிக்க அதிகாரிகள் நேற்று முன்தினம் மறுத்து விட்டனர். இதனால், சிறையில் இரவை கழிக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், சஞ்சல்குடா சிறையில் இருந்து நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று காலை விடுவிக்கப் பட்டார். பலத்த போலீஸ்பாதுகாப்புடன் வீட்டுக்குச் சென்ற அவரை, அவரது மனைவி சினேகா ரெட்டி உள்ளிட்டோர் ஆரத்தழுவி வரவேற்றனர்.

குற்றச்சாட்டு

சிறைக்கு வெளியே நடிகர் அல்லு அர்ஜுனின் வழக்கறிஞர் அசோக் ரெட்டி கூறுகையில், “உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகல் கிடைத்தும், அல்லு அர்ஜுனை சிறை அதிகாரிகள் விடுவிக்கவில்லை. ''அவரை சட்ட விரோதமாக சிறையில் அடைத்து வைத்தனர்,” என, குற்றஞ்சாட்டினார்.

ரெட்டி கிண்டல்

நடிகர் அல்லு அர்ஜுன் கைது தொடர்பாக, அவரது மனைவி சினேகா ரெட்டியின் உறவினரான, காங்கிரசைச் சேர்ந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று கூறியதாவது:ஒருவரை சிறைக்கு அனுப்பியது குறித்து இவ்வளவு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.ஆனால், ஒரு பெண் தன் உயிரை இழந்திருக்கிறார். அவரைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.அந்தப் பெண்ணின் குடும்பம் எப்படி இருக்கிறது? அந்த ஏழைப் பெண்ணின் வாழ்க்கை என்ன ஆனது என எதுவும் கேட்கவில்லை. நடிகர் அல்லு அர்ஜுன் மீதான நடவடிக்கை சரிதான். போலீசார் அவர்களது வேலையை செய்கின்றனர். அல்லு அர்ஜுன் ஒரு நடிகர். படத்தில் நடித்து அவர் பணத்தை சம்பாதிக்கிறார். அவ்வளவுதான். நம் நாட்டுக்காக, பாக்., எல்லையில் போரிட்டு அவர் வெற்றி பெற்றாரா?இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !