உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருத்தப்பட்ட வக்பு மசோதா பார்லி., கூட்டுக்குழு ஏற்பு

திருத்தப்பட்ட வக்பு மசோதா பார்லி., கூட்டுக்குழு ஏற்பு

புதுடில்லி: திருத்தப்பட்ட வக்பு வாரிய மசோதாவை, பார்லி., கூட்டுக்குழு நேற்று ஏற்றுக்கொண்டது. நாடு முழுதும் வக்பு வாரியங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் ஒழுங்குமுறைப்படுத்த வழி செய்யும் சட்டத்திருத்த மசோதாவை, கடந்த குளிர் கால கூட்டத்தொடரின் போது, லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால், பார்லி., கூட்டுக்குழு ஆய்வுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. பா.ஜ., மூத்த தலைவர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டுக்குழு, 30 தடவைக்கு மேல் கூடி, இந்த மசோதா குறித்து விவாதித்தது. அப்போது ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு இடையே காரசார விவாதங்கள் நடந்தன. இரு தரப்பும் மசோதாவில் பல்வேறு திருத்தங்களை பரிந்துரை செய்தன. இந்த திருத்தங்கள் மீது, கடந்த 27ல் ஓட்டெடுப்பு நடந்தது. அப்போது, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் அளித்த பரிந்துரைகள், ஓட்டெடுப்பு அடிப்படையில் ஏற்கப்பட்டன; எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில், வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பான பார்லி., கூட்டுக்குழுவின் அறிக்கை மற்றும் திருத்தப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க, கூட்டுக்குழுவின் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இதற்கு ஆதரவாக, 15 எம்.பி.,க்கள் ஓட்டளித்த நிலையில், 11 எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, திருத்தப்பட்ட வக்பு மசோதா ஏற்கப்பட்டதாக, பார்லி., கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் அறிவித்தார். இந்த திருத்தப்பட்ட மசோதா, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு இன்று அனுப்பப்பட உள்ளது. வரும் 31ல் துவங்கவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில், திருத்தப்பட்ட வக்பு வாரிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி தாக்கலானால், லோக்சபா, ராஜ்யசபாவில் ஆளும் தே.ஜ., கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதால், மசோதா நிறைவேறுவது உறுதி. திருத்தப்பட்ட மசோதா ஏற்கப்பட்டதற்கு காங்., - திரிணமுல் காங்., - ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கூறுகையில், '655 பக்கங்கள் உடைய பார்லி., கூட்டுக்குழுவின் அறிக்கையை எப்படி ஒரே இரவில் படிக்க முடியும்? இந்த மசோதா சிறுபான்மையினரை குறிவைக்கிறது; அரசியலமைப்புக்கு முரணானது. பார்லி.,யில் நிறைவேறினால், உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை