ஆயுதக்குழு தாக்குதலா? மணிப்பூர் அரசு மறுப்பு!
இம்பால், மணிப்பூரில், ஆயுத பயிற்சி பெற்றுள்ள கூகி சமூகத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுவினர் 900க்கும் மேற்பட்டோர், மெய்டி சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப் போவதாக வெளியான செய்தியை மணிப்பூர் அரசு மறுத்துள்ளது.இதற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ள அரசு, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.இங்கு, இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னையில், கூகி மற்றும் மெய்டி சமூகத்தினர் இடையேயான மோதல், வன்முறை நீண்ட காலமாக தொடர்கிறது. இருதரப்பும் அடிக்கடி மோதிக் கொள்கின்றன. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.இந்நிலையில், கூகி சமூகத்தைச் சேர்ந்த 900க்கும் மேற்பட்டோர், அண்டை நாடுகளில் ஆயுத பயிற்சி முடித்து திரும்பியுள்ளதாகவும், அடுத்த ஒரு சில நாட்களில் மெய்டி சமூகத்தினர் மீது அவர்கள் தாக்குதல் நடத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாயின.இதைத் தொடர்ந்து மாநிலம் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் மக்களிடையே அச்சமும் நிலவியது.இது தொடர்பாக, அரசின் ஆலோசகர் குல்தீப் சிங் மற்றும் டி.ஜி.பி., ராஜிவ் சிங் இணைந்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:ஆயுத பயிற்சி பெற்ற கூகி சமூகத்தினர், மெய்டி சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தலாம் என, உளவு தகவல்கள் வெளியாயின. இது தொடர்பாக விரிவாக விசாரிக்கப்பட்டது. அதில், ஆயுத பயிற்சி பெற்ற எவரும், அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவவில்லை என்றும், தாக்குதல்கள் நடத்தும் திட்டம் ஏதும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே.மாநிலம் முழுதும், பாதுகாப்புப் படைகள் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதனால், யாரும் அச்சப்படத் தேவையில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, தோபால் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையின்போது, துப்பாக்கிள், குண்டுகள் உட்பட அதிகளவு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.