உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமலையில் வி.ஐ.பி., கலாசாரத்தை குறைக்க திட்டம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

திருமலையில் வி.ஐ.பி., கலாசாரத்தை குறைக்க திட்டம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

திருமலை: “திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி., கலாசாரம் குறைக்கப்படும்,” என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். திருமலை திருப்பதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவிலுக்கு, உலகம் முழுதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் பங்கேற்க திருமலை வந்திருந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அங்குள்ள பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:திருமலையின் புனிதம் காக்கப்பட வேண்டும். இங்கு, கோவிந்தா நாமம் மட்டுமே கேட்க வேண்டும். மலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக வழங்க வேண்டும். மலைப்பகுதியில் 72 சதவீதமாக உள்ள அடர்ந்த வனப் பகுதியை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 80 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். கோவிலில் வி.ஐ.பி., கலாசாரம் குறைக்கப்படும். வி.ஐ.பி.,க்கள் வருகையின் போது, மற்ற பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது.லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரத்தில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது. அவற்றை பரிசோதிக்க நவீன ஆய்வகங்கள் அமைக்கப்படும். பிரசாதத்தின் தரத்தை, அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும். பக்தர்களின் கருத்துகளை பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு கூறினார். பின்னர், திருமலையில் தேவஸ்தானத்தால் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள 13.45 கோடி ரூபாய் மதிப்பிலான சமையல் கூடத்தை சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். புதிய சமையல்கூடம் வாயிலாக, 1.2 லட்சம் பக்தர்களுக்கு உணவு தயாரிக்க முடியும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை