ராணுவ தலைமையகம் பெயர் மாற்றம் விஜய் துர்க் ஆனது வில்லியம் கோட்டை
கோல்கட்டா, காலனித்துவ மரபுக்கு முடிவு கட்டும் வகையில், மேற்கு வங்கம் கோல்கட்டாவில் கிழக்கு பிராந்திய ராணுவ தலைமையகத்தின் பெயர் 'விஜய் துர்க்' என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.நம் நாட்டு ராணுவத்தின் கிழக்கு பிராந்தியத்தின் தலைமையகம், மேற்கு வங்கத்தின் தலைநகர் கோல்கட்டாவில் உள்ளது.'வில்லியம் கோட்டை' என, அழைக்கப்பட்ட இந்த கோட்டையானது, 1781ல் கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சிக் காலத்தில் ஹூக்ளி நதிக்கரையில் கட்டப்பட்டது. 6 நுழைவு வாயில்கள்
மொத்தம் 170 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த தலைமையகத்தில், ராணுவத்தின் முக்கிய கட்டடங்கள், குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த கோட்டைக்கு சவுரிங்கி, பிளாசி, கல்கத்தா, வாட்டர் கேட், புனித ஜார்ஜ், டிரஷரி கேட் என ஆறு நுழைவு வாயில்கள் உள்ளன. கடந்த 1962ல் இந்தியா - சீனா இடையிலான போரின்போது, 1963ல் வில்லியம் கோட்டை, நம் ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தலைமையகமாக மாறியது. முன்னதாக உத்தர பிரதேசத்தின் லக்னோவில் இந்த தலைமையகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், காலனித்துவ மரபுக்கு முடிவு கட்டும் வகையில், கிழக்கு பிராந்திய தலைமையகமான வில்லியம் கோட்டையின் பெயர் மாற்றப்பட்டு 'விஜய் துர்க்' என, பெயர்சூட்டப்பட்டு உள்ளது. இது குறித்து மூத்த ராணுவ அதிகாரி கூறியதாவது:வில்லியம் கோட்டை, விஜய் துர்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது. இங்குள்ள புனித ஜார்ஜ் கோட்டை நுழைவு வாயிலின் பெயர் சிவாஜி கேட் என மாற்றப்பட்டு உள்ளது. 'மானேக்சா ஹவுஸ்'
கிச்சனர் ஹவுஸ் என்ற பகுதி, கடந்த 1971ல் இந்தியா - பாகிஸ்தான் போரில் தலைவராக இருந்த பீல்ட் மார்ஷல் மானேக்சாவின் நினைவாக 'மானேக்சா ஹவுஸ்' என, மாற்றப்பட்டுள்ளது. கோட்டை உள்ளே இருக்கும் ரசல் பிளாக், சுதந்திர போராட்ட வீரர் ஜதிர்ந்திரநாத் முகர்ஜியின் நினைவாக 'ஜதின் பிளாக்' என, மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.