வளர்ப்பு நாயை தாக்கியதால் மோதல் வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
பாலக்காடு, அக். 16--பாலக்காடு அருகே, வளர்ப்பு நாயை தாக்கியதில் ஏற்பட்ட மோதலில், நாயின் உரிமையாளரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றைபாலம் வரோடு பகுதியைச் சேர்ந்தவர் சச்சின்தாஸ், 27. இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்து பைக்கில் வெளியே சென்றார். அப்போது, அவரது வளர்ப்பு நாய், அவரை பின் தொடர்ந்து சென்றது.அந்நேரத்தில், அப்பகுதியைச் சேர்ந்த ராகுல் என்பவர், பைக்கில் சென்றார். அவர், சச்சின்தாஸின் வளர்ப்பு நாயை, காலால் மிதிக்க முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து விழுந்தார். இதனால், ராகுல், சச்சின்தாஸ் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, அங்கு வந்த ராகுலின் நண்பர் ஜெயகிருஷ்ணனும் சேர்ந்து, சச்சின்தாசை கத்தியால் சரமாரியாக தாக்கினர். படுகாயமடைந்த சச்சின்தாசை அப்பகுதி மக்கள் மீட்டு, திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மோதலில் காயமடைந்த ராகுலும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.சச்சின்தாஸ் கொடுத்த புகாரின் பேரில், ஒற்றைப்பாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயகிருஷ்ணனை, 37, கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ராகுலையும் கைது செய்ய உள்ளனர்.