கோல்கட்டா: அசாம் சிறப்பு அதிரடி போலீசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் எட்டு பேர், வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில், பயங்கரவாத அமைப்பான அல் - குவைதாவின் கிளையான 'அன்சாருல்லா பங்க்ளா டீம்' செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, நம் நாட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., மற்றும் முக்கிய ஹிந்து அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டது குறித்து நம் உளவுத்துறை சமீபத்தில் எச்சரித்தது. வடகிழக்கு மாநிலமான அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் பதுங்கியுள்ள ஸ்லீப்பர் செல்கள், இது தொடர்பான ஆலோசனையில் ஈடுபடுவதாகவும் எச்சரிக்கை விடப்பட்டது.இதையடுத்து, மூன்று மாநிலங்களில் அசாம் சிறப்பு அதிரடி படையினர் நடத்திய சோதனையில், வங்கதேச பிரஜையான முஹமது சாப் ஷேக் உள்ளிட்ட எட்டு பயங்கரவாதிகள் கடந்த 19ல் கைது செய்யப்பட்டனர். இதில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மினருல் ஷேக் மற்றும் முஹமது அப்பாஸ் அலி ஆகியோர் அடங்குவர். தடை செய்யப்பட்ட வங்கதேச அன்சார் - அல் - இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இவர்கள், தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து, மேற்கு வங்க ஏ.டி.ஜி., சுப்ரதீம் சர்கார் நேற்று கூறியதாவது:சமீபத்தில் அசாம் போலீசார் கைது செய்த எட்டு பேரில், இருவர் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டனர். முர்ஷிதாபாத் மாவட்டத்தில் அவர்கள் தங்கியிருந்த பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில், பென்டிரைவ், டிஜிட்டல் சாதனங்கள், ஜிஹாத் நடவடிக்கை தொடர்பான ஆவணங்கள், போலி அடையாள அட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட எட்டு பேரும், மேற்கு வங்கத்தில் உள்ள 'சிக்கன் நெக்ஸ்ட்' எனப்படும் சிலிகுரி பாதையை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களை, நாட்டின் பிற பகுதியுடன் இணைக்கும் இந்த சிலிகுரி பாதையில் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி, அதை முடக்குவது அவர்கள் நோக்கமாக கொண்டு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் வாயிலாக, மேற்கு வங்க மாநிலம் மட்டுமின்றி வடகிழக்கு மாநிலங்களில் பல பகுதிகளில் கலவரத்தை ஏற்படுத்தவும் அவர்கள் முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.