உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெலகாவியில் டிச., 9ல் சட்டசபை கூட்டம் துவக்கம்

பெலகாவியில் டிச., 9ல் சட்டசபை கூட்டம் துவக்கம்

பெலகாவி ; பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் டிசம்பர் மாதம் 9ம் தேதி, கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் துவங்குகிறது.கர்நாடகா -- மஹாராஷ்டிரா மாநில எல்லையில் பெலகாவி மாவட்டம் உள்ளது. இங்கு மராத்தி மொழி பேசுவோர் அதிக அளவில் வசிப்பதால், பெலகாவியை, மஹாராஷ்டிரா சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால் விட்டுத்தர கர்நாடகா மறுக்கிறது. பெலகாவி தங்களுக்கு சொந்தமானது என்பதை காட்டுவதற்காக, அங்கு சுவர்ண விதான் சவுதாவை அரசு கட்டியது.ஆண்டுதோறும் டிசம்பரில் சுவர்ண விதான் சவுதாவில், சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. அப்போது பெங்களூரில் இருந்து அரசு இயந்திரங்கள் முழுதும், பெலகாவிக்கு மாற்றப்படும்.இந்நிலையில் இந்த ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடர், டிச., 9 முதல் 20ம் தேதி வரை நடத்துவதற்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், கர்நாடக அரசு அனுமதி கேட்டு இருந்தது. இதற்கு கவர்னர் நேற்று ஒப்புதல் அளித்தார்.'முடா' விவகாரத்தில் முதல்வர் மீது விசாரணை நடத்த, கவர்னர் அனுமதி கொடுத்த பின் நடக்கும் முதல் கூட்டத்தொடர் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இது ஒருபுறம் இருக்க, அரசின் தவறுகளை கண்டித்து கூட்டத் தொடரின் போது கேள்விக்கணைகளை வீசுவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இதனால் இந்த கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.அடுத்த மாதம் 14, 15ம் தேதிகள் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகும். இந்த இரு நாட்களையும் தவிர்த்து 10 நாட்கள் கூட்டம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ