பெரும்பான்மையை நிரூபிக்க 26ல் சட்டசபை சிறப்புக்கூட்டம்
விக்ரம் நகர்,:நாளை முதல்வராக பதவியேற்க உள்ள ஆதிஷி, தன் அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வசதியாக வரும் 26, 27ல் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.டில்லியின் புதிய முதல்வராக ஆதிஷி நாளை பதவியேற்கிறார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். புதிய அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வசதியாக வரும் 26, 27 ஆகிய தேதிகளில் சட்டசபையின் சிறப்புக்கூட்டத் தொடர் கூட்டப்பட்டுள்ளது.வரும் 27ம் தேதி சட்டசபையில் பெரும்பான்மையை ஆதிஷி நிரூபிக்க உள்ளார். இந்த இரண்டு நாள் சிறப்புக்கூட்டத்தொடரின்போது, கேள்வி நேரத்தையும் சேர்க்கும்படி, சட்டசபை பா.ஜ., குழுத் தலைவர் விஜேந்தர் குப்தா வலியுறுத்தி உள்ளார்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி சபாநாயகரை சந்திக்க எம்.எல்.ஏ.,க்கள் முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.முன்னதாக பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் விஜேந்தர் குப்தா தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு பின் விஜேந்தர்குப்தா வெளியிட்ட அறிக்கையில், சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தை சேர்க்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் மோகன் சிங் பிஷ்ட், ஓம் பிரகாஷ் சர்மா, அபய் வர்மா, அஜய் மஹாவார், அனில் பாஜ்பாய், ஜிதேந்திர மகாஜன் உள்ளிட்ட ஏழு பேரும் கலந்து கொண்டனர்.ஆம் ஆத்மி கட்சியில் இருந்து சமீபத்தில் பா.ஜ.,வுக்கு மாறிய எம்.எல்.ஏ., கர்தார் சிங்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.கூட்டத்தொடரில் ஆறாவது நிதிக் குழுவை அமைக்காதது, டில்லி குடிநீர் வாரியத்தின் 73,000 கோடி ரூபாய் கடன், 24 மருத்துவமனைகள் கட்டுவதில் நிதி முறைகேடுகள், ஊழல் உள்ளிட்ட பல பிரச்னைகளை எழுப்ப பா.ஜ., திட்டமிட்டுள்ளது.மேலும், “டில்லி அரசால் நிறுத்தப்பட்ட 12 பல்கலைக்கழக கல்லுாரிகளுக்கு நிதியுதவி வழங்குவது, நகரில் மழை தொடர்பான சம்பவங்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது, சாலைகளின் மோசமான நிலை காரணமாக அடிக்கடி ஏற்படும் உயிரிழப்புகள், பொதுப் போக்குவரத்து அமைப்பு குறைந்து வருவது ஆகிய பிரச்னைகளையும் சட்டசபையில் பா.ஜ., எழுப்பும்,” என, விஜேந்தர் குப்தா கூறினார்.