முடா முறைகேடு வழக்கு ரூ.300 கோடி சொத்து முடக்கம்
புதுடில்லி: 'முடா' எனப்படும் மைசூரு நகர மேம்பாட்டு துறையிடமிருந்து, கர்நாடகா முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவின் மனைவி பார்வதி, சட்டவிரோதமாக 14 மனைகள் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து சமூக ஆர்வலர் சினேஹமயி கிருஷ்ணா, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதற்கு கவர்னர் தாவர்சந்திடம் அனுமதி அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி லோக் ஆயுக்தா போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதன்படி முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, இவரது சகோதரர் மல்லிகார்ஜுன சாமி, நிலத்தின் உரிமையாளர் தேவராஜ் ஆகியோர் மீது லோக் ஆயுக்தாவினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, 300 கோடி ரூபாய் மதிப்பிலான 140 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்கள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்டுகள் உள்ளிட்ட பலரது பெயர்களில் உள்ளன என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.