உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பேராசிரியர் மீது தாக்குதல்: விசாரிக்க 6 பேர் குழு

பேராசிரியர் மீது தாக்குதல்: விசாரிக்க 6 பேர் குழு

புதுடில்லி: அம்பேத்கர் கல்லுாரி பேராசிரியரை, ஏ.பி.வி.பி., எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த, டில்லி பல்கலை மாணவர் சங்கத்தின் இணைச் செயலர் தாக்கியது தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. டில்லி பல்கலை மாணவர் சங்க இணைச் செயலர் தீபிகா ஜா. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர். இவர், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் கல்லூரி பேராசிரியர் சுஜித் குமாரை நேற்று முன் தினம், போலீசார் முன்னிலையிலேயே தாக்கினார். வீடியோ இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், டில்லி பல்கலை துணைவேந்தர் யோகேஷ் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை: அம்பேத்கர் கல்லூரி பேராசிரியர் சுஜித் குமாரை, டில்லி பல்கலை மாணவர் சங்க இணைச் செயலர் தீபிகா ஜா தாக்கியது குறித்து விசாரிக்க ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விலங்கியல் துறை பேராசிரியர் நீதா சேகல் தலைமையில் பேராசிரியர் ஜோதி ட்ரேஹான் சர்மா, ஹன்ஸ்ராஜ் கல்லூரி முதல்வர் ரமா, பேராசிரியர் ஸ்வாதி திவாகர் பி.ஜி.டி.ஏ.வி., கல்லுாரி முதல்வர் தர்விந்தர் குமார் மற்றும் அவதேஷ் குமார் ஆகியோர் கொண்ட குழு, இந்த தாக்குதல் குறித்து விசாரித்து, இரண்டு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவ 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விசாரணைக்கு, மாணவர் சங்க இணைச் செயலர் என்ற முறையில் நானும் சென்றிருந்தேன். அப்போது, பேராசிரியர் சுஜித் குமார் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னை மிரட்டினார். அந்த நேரத்தில் அவர் மது குடித்து இருந்தார். என்னை முறைத்துப் பார்த்தபடி அநாகரிகமாக பேசினார். அதனால் நான் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். அதற்காக மனதார வருந்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தக் கோரி, டில்லி பல்கலை ஆசிரியர் சங்கம், துணைவேந்தருக்கு நேற்று முன் தினம் அனுப்பிய கடிதத்தில், 'எந்த வடிவத்திலும் வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஒரு ஆசிரியரின் கண்ணியத்தின் மீதான தாக்குதல். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டு இருந்தது. அதிர்ச்சி மாணவியால் தாக்கப்பட்ட பேராசிரியர் சுஜித் குமார் கூறியதாவது: அம்பேத்கர் கல்லூரியின் ஒழுங்குமுறைக் குழு ஒருங்கிணைப்பாளராகவும் பதவி வகிக்கிறேன். கல்லுாரியில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது என் பொறுப்பு. நேற்று முன்தினம், கல்லுாரி மாணவர் சங்க விழா நேற்று முன் தினம் நடந்தது. அப்போது,​சில மாணவர்கள் கல்லூரி மாணவர் சங்கத்தின் புதிய தலைவரை தாக்கினர். அவர் என்னிடம் புகார் செய்தார். இதுகுறித்து நான் விசா ரணை நடத்தினேன். போலீஸ் அதிகாரிகளும் உடன் இருந்தனர். மாணவர்கள் என்னைச் சூழ்ந்த போது போலீசார் வந்து என்னை மீட்டனர். அதன் பின், கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் விசாரணை நடந்த போது, மாணவி தீபிகா ஜா, என்னை அறைந்தார். இது, வீடியோவிலும் பதிவாகி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். கிரோரி மால் கல்லூரி இணைப் பேராசிரியர் ருத்ராஷிஷ் சக்ரவர்த்தி கூறுகையில், “இந்த சம்பவம் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தாலும், ஆச்சரியம் இல்லை. ஏனெனில் ஏ.பி.வி.பி., அமைப்பைச் சேர்ந்தவர்களின் இதுபோன்ற செயல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போய் விட்டன,”என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி