கால்வாயில் ஓட்டு சீட்டு பெட்டிகள்; பயனற்றவை என போலீசார் தகவல்
ஹாவேரி; ஷிகாவி தொகுதி இடைத்தேர்தல் முடிந்த நிலையில், தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், கால்வாயில் ஓட்டு சீட்டு பெட்டிகள் கிடந்தன. 'அவை, பயன்பாட்டில் இல்லாத பெட்டிகள்' என, போலீசார் கூறினர்.ஹாவேரியின், ஷிகாவி சட்டசபை தொகுதிக்கு நேற்று முன்தினம் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இந்நிலையில் தொகுதிக்கு உட்பட்ட, யத்தினகள்ளி கிராமத்தின் கால்வாயில், நேற்று காலை 10 ஓட்டு சீட்டு பெட்டிகள் கிடந்தன. இதை பார்த்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த போலீசார், பெட்டிகளை பார்வையிட்டனர். ஹாவேரி தாசில்தார் சரணம்மாவும் அங்கு வந்து, ஓட்டு சீட்டு பெட்டிகளை ஆய்வு செய்தார்.போலீசார் கூறியதாவது:எத்தினகள்ளி கிராமத்தின் அருகில் உள்ள கால்வாயில், ஓட்டு சீட்டு பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பெட்டிகள் பயன்பாட்டில் இல்லை. இவற்றுக்கும், இடைத்தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.நடந்து முடிந்த இடைத்தேர்தலில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஓட்டு சீட்டு பயன்படுத்தவில்லை. செயல்பாட்டில் இல்லை என்பதால், பல ஆண்டுகளுக்கு முன், ஓட்டு சீட்டு பெட்டிகள் ஏ.பி.எம்.சி., குடோனில் வைக்கப்பட்டிருந்தன. இதை பணமாக்கும் நோக்கில், மர்ம நபர்கள் பெட்டிகளை திருடினர். அத்தனை பெட்டிகளையும், கொண்டு செல்ல முடியாமல் கால்வாயில் வீசி சென்றிருக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.