67 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
புதுடில்லி : காலிஸ்தான், சிமி, விடுதலை புலிகள், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உட்பட 67 அமைப்புகளை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நம் நாட்டுக்குள்ளும், வெளிநாடுகளில் இருந்தும் வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில், பிரிவினைவாத, பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் அவ்வப்போது திருத்தி வெளியிடும். திருத்த பட்டியல்
அதன்படி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட 67 அமைப்புகளின் திருத்த பட்டியல் நேற்று வெளியானது. அதில், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், பப்பர் கல்சா, லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், மணிப்பூர் மக்கள் விடுதலைப்படை, போடோலேண்ட் ஜனநாயக முன்னணி, ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி, அல் - குவைதா, ஐ.எஸ்., உட்பட 45 அமைப்புகளை பயங்கரவாத இயக்கங்களாக வகைப்படுத்தி தடை விதிக்கப்பட்டது. இதுபோல, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள், தமிழ்நாடு விடுதலைப்படை, விடுதலைப் புலிகள், சிமி, உல்பா, அகில இந்திய இமாம்கள் கவுன்சில் உள்ளிட்ட 22 அமைப்புகள் சட்ட விரோத இயக்கங்களாக அறிவித்து தடை செய்யப்பட்டுள்ளது. நடவடிக்கை
இந்த அமைப்புகள் இந்தியாவுக்குள் செயல்பட தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இவற்றுக்கு ஆட்கள் சேர்ப்பது, நிதி திரட்டுவது உள்ளிட்ட உதவிகளை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த பயங்கரவாத இயக்கங்களின் ஆதரவாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவர். அவர்களின் வங்கிக் கணக்கு, சொத்துகள் முடக்கப்படும்.