பட்டாசுகள் விற்பனை கண்காணிப்பு பெங்களூரு நிர்வாகம் கமிட்டி அமைப்பு
பெங்களூரு: தீபாவளி பட்டாசுகள் கொண்டு செல்வது, சேகரித்து வைப்பது, விற்பனையின்போது பாதுகாப்பு நடவடிக்கை பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க, பெங்களூரு நகர் மாவட்ட நிர்வாகம் முதன் முறையாக, கண்காணிப்பு கமிட்டி அமைத்துள்ளது.இதுதொடர்பாக பெங்களூரு நகர் மாவட்ட கலெக்டர் ஜெகதீஷ் வெளியிட்ட அறிக்கை:கடந்தாண்டு புறநகர் பகுதியின், அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டு, 14 பேர் பலியாகினர். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமலும், அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெங்களூரு நகர் மாவட்டத்தின், ஐந்து தாலுகாக்களில் தாசில்தார் பொறுப்பில் 'கண்காணிப்பு கமிட்டி' அமைக்கப்பட்டுள்ளது. கமிட்டியில் நகராட்சி, பஞ்சாயத்து, போலீஸ் துறை, மாசுக்கட்டுப்பாட்டு ஆணையம் உட்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் இருப்பர். இந்த கமிட்டி பட்டாசு விற்பனை, சேகரிப்பு, கொண்டு செல்வதை கண்காணிக்கும்.பட்டாசு விற்பனை கடைகள் திறப்பவர்கள், மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறையிடம் அனுமதி பெற வேண்டும். கடைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள், அவசர சந்தர்ப்பத்தை எதிர்கொள்ள மேற்கொண்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்வர். திருப்தி இருந்தால் லைசென்ஸ் அளிக்கப்படும்.பட்டாசு குடோன்களுக்கு, அனுமதி அளிக்கும் முன்பு போலீஸ் அதிகாரிகள், தீயணைப்புப் படை அதிகாரிகள் அந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்வர். விதிகளை பின்பற்றிய குடோன்களின் எதிரே, தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படும். பாதுகாப்பு வசதிகள் செய்யாத குடோன்களில், பட்டாசுகள் சேகரித்து வைக்க அனுமதி அளிக்கப்படாது.உச்சநீதிமன்ற உத்தரவுபடி, பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பட்டாசுகள் சேகரிக்கப்படும் அத்திப்பள்ளியில் செக் போஸ்ட் அமைக்கப்படும். ஆர்.டி.ஓ., அதிகாரிகள், போலீஸ் மற்றும் வர்த்தக வரித்துறை அதிகாரிகளின் குழுக்கள், தினமும் 24 மணி நேரம் வாகனங்களை சோதனை நடத்துவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.