கர்நாடகாவில் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட, ஏராளமான கோவில்கள் கட்டட கலை, பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் வகையில் உள்ளன. இதில் ஒன்று சிபி நரசிம்ம சுவாமி கோவில். துமகூரில் இருந்து 20 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது சிபி கிராமம். இந்த கிராமத்தில் சிபி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. 18ம் நுாற்றாண்டில் வணிகர் ஒருவர், எருமை மாடுகள் மீது, தானிய மூட்டைகளை வைத்து, வியாபாரத்திற்கு எடுத்து சென்று உள்ளார். தானியங்கள் சிவப்பானவை
சற்று இளைப்பாறு வதற்காக, நரசிம்ம கோவில் அமைந்து உள்ள இடத்தில், பாறை மீது அமர்ந்தார். தானிய மூட்டைகளை பிரித்து, தானியங்களை பாறையின் மீது காய வைத்து உள்ளார். அப்போது திடீரென தானியங்கள் சிவப்பு நிறமாக மாறியது. வணிகரும் மயங்கி விழுந்தார். அவரது கனவில் தோன்றிய நரசிம்ம சுவாமி, 'இந்த இடம் எனது இருப்பிடம், எனது இருப்பிடத்தை அசுத்தப்படுத்தி விட்டாய். இதற்கு பிராயசித்தமாக கோவில் கட்ட வேண்டும்' என்று கூறி உள்ளார்.இதனால் அந்த இடத்தில் வணிகர், சிறிய நரசிம்மர் கோவிலை கட்டினார். அதன் பின்னர் திப்பு சுல்தான் அரசவையில் திவானாக இருந்த கிருஷ்ணப்பாவின் மகன்கள் லட்சுமிநரசப்பா, புட்டண்ணா, நல்லப்பா ஆகியோர், நரசிம்மர் கோவிலை இடித்துவிட்டு, பெரிய கோவிலை கட்டி கும்பாபிஷேகம் நடத்தி உள்ளனர். ஓவியங்கள்
கோவிலின் முக்கிய தெய்வமாக நரசிம்மர், விஷ்ணு சிலைகள் உள்ளன. ராமாயணம், மஹாபாரதம், பகவத் கீதை மற்றும் நரசிம்ம புராணத்தின் கதைகளை சித்திரிக்கும் வகையில், கோவிலின் சுவர்கள் மற்றும் மேற்கூரைகளில், ஓவியங்கள் வரையப்பட்டு இருப்பது சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிலின் சுவர் ஓவியங்கள் நாட்டுபுற தன்மை கொண்டவை என்று, ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் ஜார்ஜ் மைக்கேல் கூறி உள்ளார்.நரசிம்ம சுவாமி கோவில் வளாகத்திற்குள் ராமர், கிருஷ்ணர், விநாயகர், சப்தமாதர்கள் உள்ளிட்ட ஹிந்து கடவுள்களுக்கும் சிறிய சன்னிதிகள் கட்டப்பட்டு உள்ளன. கோவில் வளாகத்தில் உள்ள 'கஜ புஷ்கரணி' என்று அழைக்கப்படும் தண்ணீர் தொட்டியில் பக்தர்கள் குளித்தால் நன்மை நடக்கும் என்பது ஐதீகம். பழங்கால கோவில் என்பதால் தொல்லியல் துறையினர் பராமரிக்கின்றனர்.தினமும் காலை 8:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். இந்த கோவில் பெங்களூரில் இருந்து 102 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது. பஸ்சில் செல்வோர், மெஜஸ்டிக்கில் இருந்து துமகூரு சென்று அங்கிருந்து செல்லலாம். ரயிலில் செல்வோர் துமகூரு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து செல்ல வேண்டும். துமகூரு பஸ், ரயில் நிலையங்களில் இருந்து, கோவில் 33 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது- நமது நிருபர் -.