பெங்., மாநகராட்சி சுகாதார அதிகாரி மீது பல கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டு
பெங்களூரு; ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் கையெழுத்தை, போர்ஜரி செய்து, கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக, சிக்பேட் வார்டு மாநகராட்சி அதிகாரி மீது, பா.ஜ., தலைவர் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் மற்றும் லோக் ஆயுக்தாவில், ரமேஷ் அளித்துள்ள புகாரில் கூறியதாவது:காந்திநகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, சிக்பேட் வார்டின் மாநகராட்சி சுகாதார அதிகாரி கிருஷ்ணா, மேற்கு மண்டல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் கையெழுத்தை போலியாக போட்டு, கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளார். அதிகாரிகளை பிளாக்மெயில் செய்கிறார்.கிருஷ்ணா, சட்டவிரோதமாக பெங்களூரு மாநகராட்சி மேற்கு மண்டல சுகாதாரப் பிரிவு கண்காணிப்பாளராக பதவியில் அமர்ந்து கொண்டார். இதே சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காட்டன்பேட், தத்தாத்ரேயா வார்டுகளிலும் தற்காலிக சுகாதார கண்காணிப்பாளரக பணியாற்றுகிறார்.கடந்த 2022ல், ஒருவரிடம் 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் போது, லோக் ஆயுக்தா போலீசாரிடம் சிக்கி, சிறைக்கு சென்றார். விடுதலையாகி வெளியே வந்த பின்னரும், அவரை காந்தி நகர் சட்டசபை தொகுதியின், அதே வார்டுகளில் சுகாதார கண்காணிப்பாளராக பணியில் நியமிக்கப்பட்டது, சந்தேகத்துக்கு இடமளிக்கிறது.மாநகராட்சி ஊழியராக இருந்து கொண்டு, தன் மனைவி பெயரில் குப்பை சேகரிக்கும் பணிக்கு அனுமதி கடிதம் பெற்றிருப்பது சட்டவிரோதம். தொகுதி எம்.எல்.ஏ.,வும், சுகாதார அமைச்சருமான தினேஷ் குண்டுராவின் பெயரை கூறிக்கொண்டு, மூத்த அதிகாரிகள், இளைய அதிகாரிகளை மிரட்டி, ஊழலில் ஈடுபட்டுள்ளார்.மேற்கு மண்டலத்தின் பொறியாளர்கள், திடக்கழிவு நிர்வகிப்பு உதவி செயல் நிர்வாக பொறியாளர்களின் கையெழுத்துகளை, கிருஷ்ணாவே போட்டுள்ளார். இதற்கு முன் மேற்கு மண்டல கமிஷனராக பணியாற்றிய தீபக்கின் கையெழுத்தையும் போர்ஜரி செய்துள்ளார். குறிப்பாக மாநகராட்சி கமிஷனராக இருந்த மஞ்சுநாத் பிரசாத்தின் கையெழுத்தையும், கிருஷ்ணாவே போலியாக போட்டு, லட்சக்கணக்கான ரூபாயை பெற்றுள்ளார்.சட்டப்படி ரீத்யா டெண்டரில் பங்கேற்று, குப்பை அள்ளும் பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர்களை தவிர, மதியம், இரவிலும் கூட குப்பை அள்ள வாகனங்களை பயன்படுத்தியதாக, ஆவணங்களை உருவாக்கி மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் பெற்றுள்ளார். இத்தகைய முறைகேடு, காந்திநகர் சட்டசபை தொகுதியில் மட்டும் நடக்கிறது. இதற்கு கிருஷ்ணாவே காரண கர்த்தாவாக உள்ளார்.இவர் மாநகராட்சியில் சுகாதார கண்காணிப்பாளர் பணியில் அமர்ந்தது எப்படி. அவர் செய்துள்ள முறைகேடுகள் குறித்து, விரிவாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.