போபால் விஷவாயு ஆலை கழிவுகள் அகற்றம்!: 40 ஆண்டுகளுக்கு பின் நடவடிக்கை
போபால்: மத்திய பிரதேசத்தில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய போபால் விஷவாயு கசிவு நடந்து 40 ஆண்டுகளுக்கு பின், ஆலையில் உள்ள 3 லட்சத்து 77,000 கிலோ அபாயகரமான கழிவுகள் வேறு இடத்துக்கு பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.மத்திய பிரதேசத்தின் போபாலில், 'யூனியன் கார்பைடு' பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையில், 1984 டிச., 23ல் விஷயவாயு கசிவு ஏற்பட்டது. மிகவும் கோரமான இந்த சம்பவத்தில், 5,479 பேர் உயிரிழந்தனர்.இதைத் தவிர, ஊனம் அடைந்தது, நிரந்தர சுகாதார பிரச்னைகளால், ஐந்து லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மூடப்பட்டுள்ள இந்த ஆலையில் உள்ள, 3 லட்சத்து 77,000 கிலோ கழிவுகளை அகற்றுவது தொடர்பான பிரச்னை நீண்டகாலமாக இருந்து வந்தது. இதை விசாரித்த ம.பி., உயர் நீதிமன்றம், மாநில அரசு சரியான நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்து, உடனடியாக அந்த கழிவுகளை அகற்றி, அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க சமீபத்தில் உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து, போபாலில் இருந்து 250 கி.மீ., தொலைவில் இந்துாருக்கு அருகே தார் மாவட்டத்தின் பீதாம்புரில் உள்ள கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையத்துக்கு கொண்டு சென்று கழிவுகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.இதற்கான பணிகள் கடந்த மாதம் 29ல் துவங்கியது. இந்த கழிவுகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்காக, பல பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய 12 டிரக்குகள், போபால் ஆலைக்கு வந்தன. முழு கவச உடை அணிந்த போபால் மாநகராட்சி, சுற்றுச்சூழல் அமைப்பு உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் முன்னிலையில், கழிவுகளை அகற்றும் பணி துவங்கியது.இது குறித்து போபால் விஷவாயு சம்பவத்திற்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பிரிவின் இயக்குனர் சுவதந்திர குமார் சிங் கூறியதாவது:இந்த கழிவுகளை அகற்றும் பணியில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். முறையான மருத்துவ பரிசோதனைகளுக்கு பின் கழிவுகளை அகற்ற துவங்கினர். 30 நிமிடங்களுக்கு ஒருமுறை அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்தன.போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து, 3 லட்சத்து 77,000 கிலோ கழிவுகளை ஏற்றிக் கொண்டு, 12 டிரக்குகள் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு புறப்பட்டன. அந்த டிரக்குகள் பீதாம்புர் சென்று சேரும் வரை அந்த வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.பலத்த பாதுகாப்புடன், நேற்று அதிகாலை 4:30 மணிக்கு அந்த டிரக்குகள் பீதாம்புர் சென்றடைந்தன. அவை, கழிவுகள் மறுசுழற்சி ஆலை வளாகத்திற்குள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.எல்லாம் திட்டமிட்டபடி சரியாக நடந்தால், அபாயகரமான கழிவுகள் மூன்று மாதங்களில் முற்றிலுமாக அழிக்கப்படும். இல்லையெனில் ஒன்பது மாதங்கள் வரை ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.பீதாம்புரில், 1.75 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு, போபால் கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பேரணி நடத்தப்பட்டது.
முதல்வர் விளக்கம்
மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான மோகன் யாதவ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:பல்வேறு கட்ட அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, கழிவுகளை எரிக்கும் பணியில் பாதுகாப்பான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். இந்த கழிவுகள் ஆபத்தானவை அல்ல. தார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
கழிவுகளை அழிப்பது எப்படி?
பீதாம்புரில் உள்ள கழிவுகள் மறுசுழற்சி மையத்தில் முதற்கட்டமாக 10,000 கிலோ கழிவுகள் எரிக்கப்படும். இதனால் வெளியாகும் வாயுக்களால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, நான்கு அடுக்கு பாதுகாப்பு பில்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.அதன்பின், எரிக்கப்பட்ட கழிவுகளின் சாம்பல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அதில், ஆபத்து ஏற்படக் கூடிய பொருட்கள் உள்ளதா என்று ஆராயப்படும். பல அடுக்கு பாதுகாப்புடன் கூடிய பைகளில் இந்த சாம்பல்கள் அடைக்கப்பட்டு, பூமியில் புதைக்கப்பட உள்ளன.பீதாம்புர் மறுசுழற்சி மையத்தில், மாதிரி கழிவுகள் 2015ல் எரித்து சோதிக்கப்பட்டது. அதில் ஆபத்து ஏதும் இல்லை என அறிக்கை அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.சிலர் கூறுவதை போல இந்த பகுதிக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது.