புதுடில்லி: குஜராத்தில் ஏற்பட்ட, 'ஏர் இந்தியா' விமான விபத்து, நம் நாட்டின் விமான வரலாற்றிலேயே மிகப்பெரிய இன்சூரன்ஸ் கிளைமை பதிவு செய்யும் என, தெரியவந்துள்ளது. இந்த விபத்துக்காக ஏர் இந்தியா, 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இன்சூரன்ஸ் கிளைம் செய்யும் என, தகவல் வெளியாகி உள்ளது.குஜராத்தின் ஆமதாபாதில் விபத்துக்குள்ளான விமானம், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமானது. தற்போது, இது டாடா குழுமத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ur6hskzx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 காப்பீடு
விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு தொகை அளிக்கப்படும் என, டாடா குழுமம் அறிவித்துள்ளது. இந்த விமானம், 2013ம் ஆண்டின் போயிங் 787 மாடல் ஆகும். இது, 2021ல் 115 மில்லியன் அமெரிக்க டாலருக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.இதன் தற்போதைய மதிப்பு 978 கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் மான்ட்ரில் ஒப்பந்தம் - 1999ன் படி, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு பயணிக்கும் தலா 1.47 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, மருத்துவ கல்லுாரி விடுதியில் விமானம் மோதியதில், பலர் உயிரிழந்தனர். இதன் காரணமாக, ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு கூடுதல் செலவு ஏற்பட்டுஉள்ளது.இந்த ஒப்பந்தத்தின்படி, விமான விபத்தில் உயிரிழந்தாலோ அல்லது காயமடைந்தாலோ இழப்பீடு வழங்க சிறப்பு உரிமைகள் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. தற்போதைய கணக்கின்படி பயணி ஒருவருக்கு அதிகபட்சம் 1.78 கோடி ரூபாய் வரை வழங்க முடியும். ஒப்பந்தம்
அப்போது, விபத்தில் இறந்தோரின் வயது, படிப்பு உள்ளிட்ட காரணிகளும் கருத்தில் கொள்ளப்படும். ஏர் இந்தியா, ஆண்டுதோறும் 300 விமானங்களுக்கு 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பை பெற்றுள்ளது. இந்த பாலிசி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 அன்று புதுப்பிக்கப்படுகிறது.தற்போது விபத்துக்குள்ளான ட்ரீம்லைனர் விமானம் ஒன்றிற்கு, அதிகபட்சமாக 2,380 கோடி ரூபாய் வரை இன்சூரன்ஸ் செய்துள்ளது. ஏர் இந்தியா, உள்நாடு மட்டுமின்றி சர்வதேச இன்சூரன்ஸ் நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் மேற்கொண்டுஉள்ளது. எனவே, அனைத்து தரப்பும் இணைந்தே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கும்.இவ்விமான விபத்தில், இறந்தவர்களுக்கு இழப்பீடு தொகையாக 1,000 கோடி ரூபாய் வரை இன்சூரன்ஸ் கிளைம் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 2020ல் கேரளாவின் கோழிக்கோடு விமான விபத்தில், 585 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் கிளைம் செய்ததே அதிகபட்சமாக உள்ளது.
எல்.ஐ.சி., விதிகளில் தளர்வு
ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், இழப்பீடு தொகையை விரைந்து பெற, எல்.ஐ.சி., நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுஉள்ளது. இதுகுறித்து எல்.ஐ.சி., நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், 'குஜராத் விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரின் வேதனையை குறைக்கும் வகையில், தங்கள் உறவினரில் யாரேனும் எல்.ஐ.சி., பாலிசிதாரர் உயிரிழந்திருந்தால், அவர்களின் இறப்பு சான்றிதழ் தேவையில்லை. அதற்கு பதிலாக அரசு பதிவுகளில் உள்ள எந்தவொரு ஆதாரமும் அல்லது மத்திய அல்லது மாநில அரசுகள் மற்றும் விமான நிறுவனங்களால் செலுத்தப்பட்ட எந்தவொரு இழப்பீடும் மரணத்திற்கான சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும்' என, குறிப்பிட்டுள்ளது. இதேபோல், பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனமும் தங்கள் பாலிசிதாரர்களின் குடும்பத்தினருக்கு உதவ முன்வந்துள்ளது.