பீஹார் சட்டசபை தேர்தலில் கோலோச்சுகிறது... வாரிசு அரசியல்!; அனைத்து கட்சிகளிலும் குடும்ப ஆதிக்கம்
பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில், வாரிசு அரசியல் கோலோச்சி வருகிறது. தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான வேட்பாளர்கள், ஏற்கனவே அரசியலில் செல்வாக்கு மிக்கவர்களின் மகன்கள், மகள்கள் அல்லது நெருங்கிய உறவினர்களாக உள்ளனர். பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. பின்னணி
நவ., 6ல், 121 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளில், நவ., 11ல் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. நவ., 14ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தேர்தலில், பா.ஜ., - காங்., கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது. புது போட்டியாளராக, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தேர்தல் களத்தில் குதித்துள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்து விட்ட நிலையில், வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களில் பெரும்பாலானோர், குடும்ப அரசியல் பின்னணியை கொண்டவர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்களின் மகன்கள், மகள்கள் அல்லது நெருங்கிய உறவினர்களாக அவர்கள் இருக்கின்றனர். இதன் மூலம் சட்டசபை தேர்தலில் வாரிசு அரசியல் ஆதிக்கம் செலுத்துவது தெளிவாகிறது. ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் அக்கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் - ரகோபூர்; அக்கட்சியின் மூத்த தலைவராக இருந்த மறைந்த முகமது ஷஹாபுதீனின் மகன் - ரகுநாத்பூர்; மூத்த தலைவர் சிவானந்த் திவாரியின் மகன் ராகுல் திவாரி, ஷாப்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். போட்டி
ஐக்கிய ஜனதா தள எம்.பி., கிரிதாரி பிரசாத் யாதவின் மகன் சாணக்யா பிரசாத் ரஞ்சன், ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில், பெல்ஹார் தொகுதியில் களம் காண்கிறார். சமீபத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் இணைந்த சூரஜ்பான் சிங்கின் மனைவி வீணா தேவி, மோகாமா தொகுதியிலும், அக்கட்சியின் மூத்த தலைவர் முன்னா சுக்லாவின் மகள் சிவானி, லால் கஞ்ச் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். பா.ஜ.,வில், முன்னாள் அமைச்சர் ஷகுனி சவுத்ரியின் மகனும், துணை முதல்வருமான சாம்ராட் சவுத்ரி - தாராபூர்; முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ராவின் மகன் நிதிஷ் மிஸ்ரா - ஜன்ஜர்பூர்; மறைந்த நபின் கிஷோர் சின்ஹாவின் மகன் நிதின் நபின் - பாங்கிபோர்; கங்கா பிரசாத் சவுராசியாவின் மகன் சஞ்சீவ் சவுராசி - திகா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திர குஷ்வாகாவின் மனைவி சிநேகலதா, சசாரம் தொகுதியிலும்; மத்திய அமைச்சரும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவருமான ஜிதன் ராம் மஞ்சியின் மருமகள் தீபா மஞ்சி, இமாம்கஞ்ச் தொகுதியிலும் களமிறங்குகின்றனர். புகழ்பெற்ற சோஷலிச தலைவர் கர்ப்பூரி தாக்கூரின் பேத்தி ஜாக்ரிதி தாக்கூர், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் சார்பில், மோர்வா தொகுதியில் போட்டியிடுகிறார். லோக் ஜனசக்தி ராம்விலாஸ் கட்சியின் எம்.பி.,யான வீணா தேவியின் மகள் கோமல் சிங், ஐக்கிய ஜனதா தளம் சார்பில், கைகாட் தொகுதியிலும்; ஐக்கிய ஜனதா தள எம்.பி., லவ்லி ஆனந்தின் மகன் சேட்டன் ஆனந்த், நபி நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மக்கள் குரல்
வாரிசு அரசியல் குறித்து, பாட்னாவில் உள்ள ஏ.என்.சின்ஹா சமூக ஆய்வுகள் நிறுவனத்தின், பொருளாதார உதவி பேராசிரியர் வித்யார்த்தி விகாஸ் கூறியதாவது: வாரிசுகள் அரசியலில் நுழைவதை பார்க்கும் போது, சித்தாந்த உறுதிப்பாடுகள், அரசியலமைப்பு மதிப்புகள், ஜனநாயக கோட்பாடுகள் குறித்து, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கவலை இல்லை என்பது தெரிகிறது. அரசியல் குடும்பங்களில் பிறந்தவர்கள் அரசியலுக்குள் வருவதை எதிர்த்து, மக்கள் குரல் கொடுக்க வேண்டும். கடந்த 77 ஆண்டுகளாக, பீஹாரில் கல்விக்கு ஒருபோதும் முன்னுரிமை அளிக்கப்படாததே வாரிசு அரசியலுக்கு காரணம். பீஹாரில் கிராமப்புற மக்களின் கல்வி நிலை மிகவும் குறைவு. சமீபத்திய ஜாதி கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் 14.71 சதவீதம் பேர் மட்டுமே 10-ம் வகுப்பை முடித்துள்ளனர். அவர்களுக்கு அரசியல் பற்றி விழிப்புணர்வு இல்லை. இதை பயன்படுத்தி, அரசியல்வாதிகள் தங்களது வாரிசுகளை அரசியலில் களமிறக்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இன்றைய காலத்தில், ஒரு சாதாரண தொண்டர் தேர்தலில் போட்டியிடுவது என்பது முடியாத காரியம். அதே சமயம், ஒவ்வொரு தேர்தலிலும், 'பிரபலம்' என்பது ஓர் அங்கமாகி விட்டதால், சாதாரண தொண்டருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. - மிருத்யுஞ்சய் திவாரி, செய்தி தொடர்பாளர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் பா.ஜ.,வை பொறுத்தவரை பிரபலம், வாரிசு என்ற அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. திறமை, மக்கள் பணி மீது அர்ப்பணிப்பு உள்ள நபர்களை மட்டுமே தேர்வு செய்கிறோம். எளிய பின்னணியில் இருந்து, கட்சியின் அனைத்து நிலைகளிலும் பணியாற்றிய பிரதமர் மோடியை ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். -நீரஜ் குமார், செய்தி தொடர்பாளர், பா.ஜ.,