உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் சட்டசபைக்கு நவ., 6 மற்றும் 11 இரண்டு கட்டங்களாக தேர்தல்

பீஹார் சட்டசபைக்கு நவ., 6 மற்றும் 11 இரண்டு கட்டங்களாக தேர்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஹார் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில், இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவ., 6ல், 121 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளில், நவ., 11ல் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. நவ., 14ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு சட்டசபையின் பதவிக்காலம், நவ., 22ல் முடிவடைகிறது. இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பீஹார் சட்டசபை தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. தலைநகர் டில்லியில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கூறியதாவது: பீஹாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கும். நவ., 6ல், 121 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடக்கும். தொடர்ந்து நவ., 11ல், 122 தொகுதிகளில் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும். இவற்றில் பதிவாகும் ஓட்டுகள், நவ., 14ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 90,712 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கும். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், 'வெப் கேமரா' வசதி செய்யப்பட்டுள்ளது. வயதான மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவ, ஓட்டுச்சாவடி மையங்களில் சாய்வுதளங்கள் நிறுவப்படும். பீஹார் சட்டசபை தேர்தலில் முதன்முறையாக, ஓட்டுச்சாவடிகளில் மொபைல் போன் டிபாசிட் கவுன்டர்கள் அமைக்கப்பட உள்ளன. மொபைல் போனை இந்த கவுன்டரில் ஒப்படைத்து விட்டு, வாக்காளர் ஓட்டளிக்கலாம். சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பின் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், தங்கள் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு, 10 நாட்களுக்கு முன் வரை விண்ணப்பிக்கலாம். வேட்புமனு தாக்கல் முடிந்ததும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதுவே தேர்தலுக்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளில், 38 தொகுதிகள் எஸ்.சி., பிரிவினருக்கும், இரண்டு தொகுதிகள் எஸ்.டி., பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பின், பீஹாரில் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. 22 ஆண்டுகளுக்கு பின், அம்மாநிலத்தில் நடந்த சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, 47 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தேர்தல் அட்டவணை நிகழ்வுகள் முதற்கட்ட தேர்தல் (121 தொகுதிகள்) 2ம் கட்ட தேர்தல் (122 தொகுதிகள்) தேர்தல் தேதி அறிவிப்பாணை வெளியீடு 10.10.25 13.10.25 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 17.10.25 20.10.25 வேட்புமனு பரிசீலனை 18.10.25 21.10.25 வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் 20.10.25 23.10.25 ஓட்டுப்பதிவு 6.11.25 11.11.25 ஓட்டு எண்ணிக்கை 14.11.25 மொத்த வாக்காளர்கள் 7.42 கோடி ஆண் வாக்காளர்கள் 3.92 கோடி பெண் வாக்காளர்கள் 3.50 கோடி முதன்முறை வாக்காளர்கள் 14 லட்சம் 85 வயதுக்கு மேற்பட்டோர் 4.04 லட்சம் 100 வயதை கடந்தோர் 14,000 திருநங்கையர் 1,725 8.53 லட்சம் பணியாளர்கள் பீஹாரில் சட்டசபை தேர்தல் நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடப்பதை உறுதி செய்ய, 8.53 லட்சம் ஓட்டுச்சாவடி பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களில், 17,800 தேர்தல் பார்வையாளர்களும், ஓட்டு எண்ணிக்கைக்கு 4,800 தேர்தல் பார்வையாளர்களும் அடங்குவர். மேலும், 2.5 லட்சம் போலீசாரும் பணியமர்த்தப்படுவர். முதன்முறையாக, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒருவர் என, மொத்தம் 243 பொது பார்வையாளர்கள் தேர்தல் செயல்முறையை மேற்பார்வையிடுவர். இவர்கள், வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக இருப்பர். இது தவிர, பீஹாரில் 90,712 ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகளும், 243 தேர்தல் பதிவு அலுவலர்களும் உள்ளனர். 250 ஓட்டுச்சாவடிகளில் போலீசார் குதிரைகளை பயன்படுத்தி ரோந்து செல்வர். 7 மாநிலங்களில் இடைத்தேர்தல் ஜம்மு - காஷ்மீரின் புத்காம், நக்ரோட்டா; ராஜஸ்தானின் அன்டா; ஜார்க்கண்டின் கட்சிலா; தெலுங்கானாவின் ஜூப்ளி ஹில்ஸ்; பஞ்சாபின் டார்ன் தரன்; மிசோரமின் டாம்பா; ஒடிஷாவின் நுவாபடா ஆகிய சட்டசபை தொகுதிகளில், நவ., 11ல் இடைத்தேர்தல் நடக்கும் என்றும், நவ., 14ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

17 புதிய நடைமுறைகள்

பீஹார் சட்டசபை தேர்தலில், 17 புதிய நடைமுறைகளை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 'இனி வரும் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களிலும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும்' என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதன் விபரம்: 1 அரசியல் கட்சிகளால் அங்கீகரிக்கப்பட்ட, பயிற்சி பெற்ற பூத் அளவிலான ஏஜென்டுகள் இந்த தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலை சரியாக தயாரிப்பது, அதில், எழும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, மேல் முறையீடு செய்வது ஆகியவற்றுக்காக இவர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. 2 பீஹார் தேர்தலுக்காக நாடு முழுதும், 7,000க்கும் அதிகமான பூத் அளவிலான அதிகாரிகள் மற்றும் பூத் அளவிலான கண்காணிப்பாளர்களுக்கு டில்லியில் உள்ள ஐ.ஐ.ஐ.டி.இ.எம்., எனப்படும், இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 3 தேர்தலின்போது எந்தவொரு நிலைமையையும் சமாளித்து சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பயிற்சி பெற்ற போலீஸ் அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். 4 பீஹார் வாக்காளர் பட்டியலில் தகுதி வாய்ந்த எந்த வாக்காளரும் விடுபடவில்லை. அதே போல், தகுதியற்ற எந்த வாக்காளரும் சேர்க்கப்படவில்லை. அந்த அளவுக்கு வாக்காளர் பட்டியல் பரிசுத்தமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 5 பி.எல்.ஓ., எனப்படும் பூத் அளவிலான அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், கண்காணிப்பு குழுவினர், தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோருக்கான ஊதியம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. 6 இ.ஆர்.ஓ., எனப்படும், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் ஏ.இ.ஆர்.ஓ., எனப்படும், தேர்தல் நடத்தும் உதவி அதிகாரிகள் ஆகியோருக்கு முதல் முறையாக மதிப்பூதியம் வழங்கப்படவுள்ளது. 7 புதிய வாக்காளர்களுக்கு அவர்கள் பதிவு செய்த 15 நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டையை வழங்குவதற்கான புதிய வழிகாட்டு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8 வாக்காளர் அடையாள அட்டை எப்போது கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள ஒவ்வொரு கட்டத்திலும் எஸ்.எம்.எஸ்., மூலம் அறிவிக்கை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 9 நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய பி.எல்.ஓ.,க்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 10 வாக்காளர்கள் தங்கள், 'மொபைல் போன்'களை பாதுகாப்பாக வைக்க, ஓட்டுச்சாவடிக்கு வெளியே பிரத்யேக மையங்கள் அமைக்கப்படும். 11 வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் சமூக குடியிருப்புப் பகுதிகளில் கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும். 12 வாக்காளர்களுக்கு அதிகாரபூர்வமற்ற அடையாளச் சீட்டுகளை விநியோகிக்கும் மையங்களை ஓட்டுச்சாவடியில் இருந்து 100 மீ.,க்கு அப்பால் அமைத்துக் கொள்ள அரசியல் கட்சியினருக்கு அனுமதி தரப்படும். 13 தேர்தலை சுமுகமாக நடத்தும் வகையில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நுாறு சதவீத இணைய ஒளிபரப்பு மேற்கொள்ளப்படும். 14 வாக்காளர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் முதல் முறையாக இடம் பெறுகிறது. 15 தபால் வாக்குகள் முழுதாக எண்ணி முடிக்கப்பட்ட பிறகே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் இறுதிக்கட்ட பணி நடக்கும். 16 ஓட்டுச்சாவடியின் மொத்த ஓட்டுகளுடன், பதிவான ஓட்டுகள் பொருந்தாவிட்டால், 'விவிபிஏடி' எனப்படும், ஒப்புகை சீட்டு எண்ணிக்கை கட்டாயமாக்கப்படும். 17 தேர்தல் நாளில், ஓட்டு சதவீத விபரங்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, 'இசிஐநெட்' செயலியில் பதிவிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தாமரை மலர்கிறது
அக் 07, 2025 01:22

பீகார் மகளிர் அனைவருக்கும் மத்திய அரசு பத்தாயிரம் ரூபாய் ஒதுக்கி உள்ளது. பிஜேபி தான் அங்கு வெல்லும் என்பதற்கு இந்த ஒரு திட்டம் ஒன்றே போதும். அரசியலில் யாராலும் பிஜேபியை வெல்லமுடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை