உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் வாக்காளர் திருத்த பணிக்கு தடை விதிக்க... மறுப்பு!: ஆதார் அட்டையை ஏற்குமாறு கோர்ட் பரிந்துரை

பீஹார் வாக்காளர் திருத்த பணிக்கு தடை விதிக்க... மறுப்பு!: ஆதார் அட்டையை ஏற்குமாறு கோர்ட் பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஹாரில், தலைமை தேர்தல் கமிஷன் நடத்தி வரும் வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளுக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இந்த சரிபார்ப்பு பணியின்போது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் அட்டைகளையும் உரிய ஆவணமாக கருத்தில் கொள்ளும்படி தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைத்தது. பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்கவுள்ளது.இதையடுத்து, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை தலைமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் விசாரணை நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஜோய்மாலியா பக்ஷி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

தேவை என்ன?

மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன் ஆஜரானார். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், தலைமை தேர்தல் கமிஷன் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கே.கே.வேணுகோபால், ராகேஷ் திவேதி, மனிந்தர்சிங் ஆகியோர் ஆஜராகினர். மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்:கோபால் சங்கரநாராயணன்: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியால், பட்டியலில் இருக்கும் அனைவரும் தங்கள் ஆவணங்களை கொடுத்து அதை மீண்டும் பதிவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இதனால், 7.9 கோடி மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.கடந்த 2003ல் இப்படியான திருத்தப் பணிகள் நடந்தன. அதன்பின், 10 தேர்தல்கள் பீஹாரில் நடந்து முடிந்து விட்டன. அப்படி இருக்கும் போது தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நேரத்தில், அவசர அவசரமாக இதை செய்ய வேண்டிய தேவை என்ன?மேலும், பல இடங்களில் ஆதார் அட்டையை ஆவணமாக எடுத்துக் கொள்ள முடியாது என தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது. இது, தேர்தல் கமிஷனின் தன்னிச்சையான செயல்பாடு.உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஆதார் அடையாள அட்டையை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அப்படி இருக்கும்போது அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தேர்தல் ஆணையம் எப்படி கூற முடியும்?ஒருவர் இந்திய குடிமகனா இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டியது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் வேலை. அதை செய்வதன் வாயிலாக தலைமை தேர்தல் கமிஷன் அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளது. நீதிபதிகள்: அரசியல்அமைப்பின் கீழ் இத்தகைய பணிகளை மேற்கொள்ள தலைமை தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இருக்கிறது. அதை செய்யக்கூடாது என நீங்கள் எப்படி சொல்ல முடியும்? அவர்களுக்கு இருக்கும் அதிகாரத்தை அவர்கள் எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் எப்படி வரையறுக்க முடியும்?மனு தாக்கல் செய்துள்ள அனைவருமே தேர்தல் கமிஷனின் அதிகாரத்தை எதிர்க்கவில்லை; மாறாக அது செய்யப்படும் காலத்தை தான் எதிர்க்கிறீர்கள். குடியுரிமை இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கக்கூடாது என்பதற்காக, இப்படியான நடைமுறைகளை மேற்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. கபில் சிபல்: இந்திய குடியுரிமை சட்டம், மத்திய அரசுக்கு தான் அதிகாரம் வழங்கியிருக்கிறதே தவிர தேர்தல் கமிஷனுக்கு அல்ல. ஒருவர் இந்திய குடிமகனா இல்லையா என்பதை தேர்தல் கமிஷன் எப்படி முடிவு செய்ய முடியும்?

எங்கள் கடமை

குடிமக்கள் என்பதால் தான், அரசு அவர்களுக்கு ஆவணங்களை வழங்கி இருக்கிறது. அப்படி வழங்கப்பட்ட ஆவணத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக்கூறி, அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது அதிர்ச்சி அளிக்கிறது.நாங்கள் ஒரு ஆவணத்தை கொடுக்கிறோம். அதை நீங்கள் பூர்த்தி செய்து தரவில்லை என்றால், உங்களை ஓட்டளிக்க அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் கமிஷன் சொல்வது மக்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. என்னை இந்திய குடிமகன் இல்லை என தேர்தல் கமிஷன் எப்படி சொல்ல முடியும்?இவ்வாறு மனுதாரர்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.இதை தொடர்ந்து தலைமை தேர்தல் கமிஷன் அளித்த பதில்:அரசியல் சாசனப்பிரிவு 324, தேர்தல் கமிஷனுக்கு அளித்துள்ள அதிகாரத்தின் கீழ் செயல்படுகிறோம். மேலும், ஒரே நபர் இரண்டு இடங்களில் ஓட்டளிப்பதையும், குடிமக்கள் அல்லாதோர் ஓட்டளிப்பதையும் தடுப்பது எங்கள் கடமை.இந்தப் பணியில் மதம் சார்ந்தோ, ஜாதி சார்ந்தோ எந்தவிதமான பாகுபாட்டையும் நாங்கள் காட்டவில்லை. தகுதியற்றவர்கள் நீக்கப்படுகின்றனர். தகுதி உள்ளோருக்கு அவர்களது உரிமை நிலைநாட்டப்படுகிறது. வழக்கு நிலுவையில் இருப்பதால் வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்படாது என்று உறுதியளிக்கிறோம்.இவ்வாறு தலைமை தேர்தல் கமிஷன் தரப்பு தெரிவித்தது.இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் கமிஷன் தொடர தடை இல்லை. இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷனின் அதிகாரம், அதை பயன்படுத்துவதற்கான நடைமுறை மற்றும் குறுகிய காலக்கெடு ஆகிய மூன்று விஷயங்களை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது. எனவே, வரும் 28ம் தேதி உரிய அமர்வு முன் இந்த வழக்கு பட்டியலிடப்படும். ஒருவார காலத்திற்குள் பதில் மனுவை தாக்கல் செய்யலாம்.மேலும், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றையும், சரிபார்ப்பு ஆவணங்களாக தேர்தல் கமிஷன் கருத வேண்டும் என பரிந்துரைக்கிறோம். இவ்வாறு உத்தரவில் குறிப்பிட்டனர்- டில்லி சிறப்பு நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

kannan
ஜூலை 11, 2025 15:47

கொடுத்தது யார்? தவறாக க் கொடுத்திருந்தால் அதற்க்கு என்ன தண்டனை?


Palanisamy Sekar
ஜூலை 11, 2025 04:02

காங்கிரசுக்கு எப்படையாவது ஒரு மாநிலத்திலாவது ஜெயித்து காட்டணும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறது. அதற்காக அவர்கள் ரோஹாங்கிய முஸ்லிம்களையும் பங்களாதேசத்திலிருந்து வந்த இஸ்லாமியர்களையும் வாக்காளர்களாக மாற்றிட போலித்தனமாக பிகாரிகள் வேலைதேடி வேறு மாநிலங்களுக்கு சென்றவர்களின் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு ஆதார் அட்டைகளை தயார் செய்துள்ளார்கள். புகாரின் அடிப்படையில்தான் தேர்தல் கமிஷன் தனது பணியினை செய்ய முற்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் கூட சில நல்ல நீதிபதிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அது என்னமோ தெரியல திமுகவுக்கு மட்டும் அறிவாலயம் போல செயல்படுவதை பற்றி எல்லோருக்கும் இருக்கும் அதே டவுட்டு எனக்கும் இருக்குது மற்றபடி சில நீதிபதிகள் ஓகே ரகம்தான்


Kasimani Baskaran
ஜூலை 11, 2025 03:48

கள்ளக்குடியேறிகளுக்குக்கூட ஆதார் கொடுத்து இருப்பதால் வேறு முறைகளில் அவர்களது குடியுரிமையை உறுதி செய்ய வேண்டும்.


முக்கிய வீடியோ