உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஒப்புக்கொண்ட பிலாவல் புட்டோ

பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஒப்புக்கொண்ட பிலாவல் புட்டோ

இஸ்லாமாபாத்: பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாகவும், அதில் ரகசியம் எதுவும் இல்லை என்றும், அந்நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ நேற்று தெரிவித்தார். ஜம்மு -- காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் பலியாகினர். இதையடுத்து, இந்தியா - பாக்., இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.இந்நிலையில், பாக்., முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பாக்., மக்கள் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் மகனுமான பிலாவல் புட்டோ, தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: பயங்கரவாதிகளுக்கு பாக்., ஆதரவு அளித்து வந்தது உண்மை தான். அதில் ரகசியம் எதுவும் கிடையாது. அதன் விளைவாக, நாங்கள் ஏராளமானவற்றை அனுபவித்து, பாடங்களை கற்றுக் கொண்டோம். முன்னாள் பிரதமரான என் தாயும் பயங்கரவாதத்தால் கொலை செய்யப்பட்டார். பாக்., வரலாற்றில் பயங்கரவாதமும் ஒரு பகுதி என்பது உண்மையே; அது துரதிர்ஷ்டவசமான பகுதி. அதனால்தான், பயங்கரவாதத்தை எதிர்த்து போராட, அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகத்துடன் பாக்., இணைந்து பணியாற்றியது. பயங்கரவாதிகள் விவகாரத்தில் எங்களுக்கான தீர்வை மட்டுமல்லாது, சர்வதேச சமூகத்தின் கவலைகளையும் கருதி சீர் திருத்தங்களை செய்து வருகிறோம். ரத்தக்களறியை ஆதரிப்பது என் நோக்கம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். பயங்கரவாதத்துக்கு பாக்., ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே அந்த நாட்டு ராணுவ அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது முன்னாள் வெளியுறவு அமைச்சரும் அதை உறுதிப்படுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

m.arunachalam
மே 03, 2025 05:54

அவரையை விதைத்துவிட்டு துவரையை அறுவடை செய்ய முடியாது . இதில் இனம், மொழி , ஜாதி மற்றும் மதம் என்ற பாகுபாடு கிடையாது . தெளிதல் நலம் .


சமீபத்திய செய்தி