| ADDED : அக் 11, 2025 06:44 AM
புதுடில்லி : பிறப்பு, ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சேவைகளுக்கு நேரில் வராமல், 'வாட்ஸாப்' செயலி மூலமாகவே விண்ணப்பித்து பெறும் வசதியை டில்லி அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. டில்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 'வாட்ஸாப் வழியாக அரசு நிர்வாகம்' என்ற திட்டத்தை அரசு துவங்கி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தற்போது, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கப்படும் பல்வேறு சேவைகள், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன், 'வாட்ஸாப்' தகவல் பரிமாற்ற செயலியிலேயே ஒருங்கிணைக்கும் பணி நடக்கிறது. இதை, டில்லி அரசின் தகவல் தொழில்நுட்ப துறை உருவாக்கி வருகிறது. திட்டத்தை நிர்வகிக்க ஒரு தொழில்நுட்ப நிறுவனம் அரசால் நியமிக்கப்படும். திட்டம் குறித்து மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரசின் பல துறைகளில் வழங்கப்படும் கிட்டத்தட்ட 50 சேவைகள், 'வாட்ஸாப்' மூலமாக விண்ணப்பிக்க கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில், 'வாட்ஸாப்'பில், 'சாட்பாட்' எனப்படும், கேள்வி - பதில் முறையில் அரசு சேவைகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இதன் மூலம் பிறப்பு மற்றும் ஜாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றை, தேவையான ஆவணங்களை பதிவேற்றி பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.