உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாய்ப்பால் சுரக்க வைக்கும் பிசிலு மாரம்மா

தாய்ப்பால் சுரக்க வைக்கும் பிசிலு மாரம்மா

தான் பட்டினி கிடந்தாலும், தன் பிள்ளைகள் பட்டினி இருப்பதையும், கஷ்டப்படுவதையும் எந்த தாயாலும் பொறுக்க முடியாது. இது கடவுளுக்கும் பொருந்தும். வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்தாலும் பிசிலு மாரம்மா, தன்னை நம்பிய பக்தர்களை கை விட்டது இல்லை.

2 தலைமுறை

கோவில்கள் என்றால் கட்டடம், மேற்கூரை, கர்ப்ப கிரஹம் இருப்பது வழக்கம். ஆனால் பிசிலு மாரம்மா, திறந்த வெளியில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மைசூரு நஞ்சன்கூடின் ஹெடதலே கிராமத்தில் பிசிலு மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை பற்றி, கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். கிராமத்துக்குள் மக்கள் வாகனங்களில் பயணிக்கும் சாலையில் இக்கோவில் உள்ளது. இரண்டு தலைமுறைகளாக, பிசிலு மாரம்மா சாலையில் குடிகொண்டுள்ளார். மாரியம்மனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோவிலாகும். அக்கம், பக்கத்தில் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், மேற்கூரை கிடையாது. பிசிலு மாரம்மா மழையில் நனைந்தும், வெயிலில் உலர்ந்தாலும் தன்னை நாடி வந்த பக்தர்களை கை விட்டது இல்லை என்பது ஐதீகம்.அம்பாளுக்கு கட்டடம் கட்டி, மேற்கூரை அமைத்து கோவில் கட்ட கிராமத்தினர் முடிவு செய்தனர். ஆனால் கனவில் வந்த மாரம்மா, 'எனக்கு மேற்கூரை தேவையில்லை. திறந்த வெளியில் இருக்க விரும்புகிறேன்' என, கூறினாராம். எனவே கோவில் கட்டும் எண்ணத்தை நிறுத்தினர். ஆண்டுதோறும் ஜனவரியில் விழா நடத்தப்படுகிறது.

பிரார்த்தனை

குழந்தை இல்லாத தம்பதி, பிசிலு கோவிலுக்கு வந்து, பிரார்த்தனை செய்து கொண்டால், குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். குழந்தை உள்ள பெண்களுக்கு, தாய்ப்பால் சுரக்கவில்லை என்றால், இங்கு வந்து வேண்டினால் தாய்ப்பால் சுரக்குமாம்.வேண்டுதல் நிறைவேறிய பின், கோவிலுக்கு வந்து பூஜைகள் செய்து, பிராரத்தனையை நிறைவேற்றுகின்றனர். கோவிலுக்கு வந்து பூஜித்தால், ஆரோக்கியம் விருத்தியாகும் என்பது, மக்களின் நம்பிக்கையாகும். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும். கோவிலை பற்றி கேள்விப்பட்டவர்கள், தரிசிக்காமல் இருப்பதில்லை. வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் வருகின்றனர். நவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.

செல்வது?

மைசூரின், நஞ்சன்கூடுக்கு அனைத்து நகரங்களில் இருந்தும் அரசு பஸ், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் வாகன வசதியும் உள்ளது. நஞ்சன்கூடுக்கு வந்திறங்கி, பஸ் அல்லது ஆட்டோக்களில், கோவிலுக்கு செல்லலாம். நஞ்சன்கூடில் தங்கும் வசதிகள் உள்ளன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி