உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., - எம்.எல்.சி., ரவியை உடனே விடுவிக்கணும்!:கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பா.ஜ., - எம்.எல்.சி., ரவியை உடனே விடுவிக்கணும்!:கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பெலகாவி: பெண் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை ஆபாசமாக திட்டியதாக கூறப்படும் வழக்கில், கைது செய்யப்பட்ட பா.ஜ., - எம்.எல்.சி., ரவியை உடனடியாக விடுவிக்க உயர் நீதிமன்றம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டது.பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் நடந்த சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. அம்பேத்கர் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்து, நேற்று முன்தினம் காலை மேல்சபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது, பெண்கள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை, பா.ஜ., - எம்.எல்.சி., ரவி ஆபாசமாக திட்டியதாக, காங்கிரஸ் எம்.எல்.சி.,க்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இது தொடர்பாக, ஹிரேபாகேவாடி போலீஸ் நிலையத்தில் லட்சுமி ஹெப்பால்கர் புகார் செய்தார். இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், சுவர்ண விதான் சவுதாவுக்கு சென்று ரவியை கைது செய்தனர்.ரவி கைது செய்யப்பட்டதை கண்டித்து, அவரது சொந்த ஊரான சிக்கமகளூரில் போராட்டம் நடந்தது. சிலர் தாங்களாக முன்வந்து கடைகளை அடைத்தனர். ஹிரேபாகேவாடி போலீஸ் நிலையம் முன், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், துணை தலைவர் அரவிந்த் பெல்லத், பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் உள்ளிட்டோர், போராட்டத்தில் ஈடுபட்டனர். * கொல்ல சதி இந்நிலையில், ஹிரேபாகேவாடி போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்த போது, இரும்பு கம்பி இடித்ததில் ரவியின் தலையில் காயம் ஏற்பட்டது. அவரது தலையில் கட்டு போட்டு போலீசார் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின், அங்கிருந்து கானாபுரா அருகே நந்தகாடா போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கிருந்து கானாபுரா கொண்டு செல்லப்பட்டார்.பின் ராமதுர்கா, சவதத்தி என ஒவ்வொரு போலீஸ் நிலையமாக, ரவியை ஜீப்பில் ஏற்றி சென்று, போலீசார் அலைக்கழித்தனர். நேற்று அதிகாலை 3:00 மணியளவில் சவதத்தி போலீஸ் நிலையம் முன், சாலையில் அமர்ந்து ரவி போராட்டம் நடத்தினார். 'எதற்காக என்னை இப்படி அலைக்கழிக்கிறீர்கள். என்னை கொலை செய்ய சதி செய்கிறீர்களா' என்று கேட்டு அலறினார்.* தலையில் காயம் நேற்று காலை 11:00 மணிக்கு ரவியை, பெலகாவி 5வது ஜே.எம்.சி., நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, ''நான் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு சம்மன் கொடுக்காமல், சட்டவிரோதமாக கைது செய்தனர். ஒவ்வொரு போலீஸ் நிலையமாக என்னை அழைத்து சென்று அலைக்கழிக்க செய்தனர். எனது தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது. நீண்ட நேரம் கழித்தே முதலுதவி சிகிச்சை செய்தனர். உணவு, தண்ணீர் கூட தரவில்லை. இதன் பின்னணியில் துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் உள்ளனர்,'' என்று நீதிபதியிடம் ரவி கூறினார்.இதையடுத்து, அவரை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், பாதுகாப்புடன் அழைத்து செல்ல வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். பெலகாவியில் இருந்து பெங்களூருக்கு போலீஸ் வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் ரவி அழைத்து செல்லப்பட்டார்.* சட்டவிரோதம்இதற்கிடையில், ரவி மீதான வழக்கை ரத்து செய்ய கோரி, அவரது சார்பில் மூத்த வக்கீல் சந்தேஷ், உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார். இதை நீதிபதி உமா விசாரித்தார். சந்தேஷ் வாதாடுகையில், ''எனது மனுதாரரை பெலகாவி போலீசார் சட்டவிரோதமாக கைது செய்தனர். அவருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கவில்லை. என்ன அடிப்படையில் கைது செய்தனர் என்றும் தெரியவில்லை.''உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவரது கைது நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். மக்கள் பிரதிநிதியான அவரிடம் போலீசார் கருணை காட்டாமல் நடந்து உள்ளனர். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்,'' என்றார்.அரசு வக்கீல் பெல்லியப்பா வாதாடுகையில், ''மனுதாரரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் பெலகாவியில் இருந்து பெங்களூரு அழைத்து வருகின்றனர். ஜாமின் கேட்டு, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை நாளை (இன்று) நடக்கிறது. அவரை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை. ஒருவேளை சட்டவிரோதம் என்றால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யட்டும். போலீசாரிடம், மனுதாரர் அநாகரீகமாக நடந்து உள்ளார். தன்னை ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்று நினைத்து கொண்டு பேசுகிறார்,'' என்றார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி உமா, ''கடுமையான குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை கூட பல ஆண்டுகளாக போலீசார் கைது செய்வது இல்லை. ஒரு மனிதனின் சுதந்திரம் பறிக்கப்படும் போது அதை பாதுகாப்பது நீதிமன்றத்தின் கடமை. மனுதாரரும், அமைச்சரும் மக்கள் பிரதிநிதிகள். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவரையும் ஹீரோக்கள் போன்று பார்க்கின்றனர்,'' என்றார்.பின், ரவியை உடனடியாக விடுவிக்க, நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மனு மீதான விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ரவியை விடுவிக்க கோரிய செய்தி வந்ததும், சிக்கமகளூரு பசவனஹள்ளி சாலையில் உள்ள, அவரது வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் கூடி, 'ரவிக்கு ஜெய்... ரவிக்கு ஜெய்' என்று கோஷம் எழுப்பி கொண்டாடினர். 'நீதி வெற்றி பெற்றுள்ளது' என்று, பா.ஜ., தலைவர்களும் வரவேற்றுள்ளனர். =========பாக்ஸ்கள்பதிவாகவில்லைமேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி நேற்று கூறுகையில், ''அமைச்சர் லட்சுமியை, எம்.எல்.சி., ரவி ஆபாசமாக பேசியதாக கூறப்படும் பிரச்னை பெரிதாகி உள்ளது. சபையில் உறுப்பினர்கள் பேசிய ஆடியோ பதிவுகளை ஆய்வு செய்த போது, ரவி ஆபாசமாக பேசியது போன்று எதுவும் பதிவாகவில்லை. ஆனாலும் காங்கிரசின் உமாஸ்ரீ உட்பட நான்கு எம்.எல்.சி.,க்கள் ரவி, ஆபாசமாக பேசினார் என்று என்னிடம் கூறினர். ரவி கைது செய்யப்பட்டு இருப்பதால், இந்த பிரச்னையை இனி நீதிமன்றம் பார்த்து கொள்ளும்,'' என்றார். ===================மானம் இல்லையா?துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''பெண்களுக்கான திட்டத்தை அமல்படுத்தும் துறையின் அமைச்சர் லட்சுமியை பார்த்து ரவி ஆபாசமாக பேசி இருப்பது சரியல்ல. அவர் ஒரு முறை, இரு முறை இல்லை, 12 முறை அந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். ரவியை கைது செய்ததை கண்டித்து பா.ஜ.,வினர் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுக்கு மானம், மரியாதை இல்லையா.''கானாபுரா போலீஸ் நிலையத்தில் வைத்து ரவியுடன், பா.ஜ., தலைவர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர். லட்சுமியை, ரவி ஆபாசமாக திட்டியதை சபையில் வைத்தே விவாதிக்க மேலவை தலைவர் அனுமதித்து இருக்க வேண்டும். ரவிக்கு வாய் அதிகம். சித்தராமையாவை சித்தராமுல்லாகான் என்று அடிக்கடி கூறுபவர் தான் அவர்,'' என்றார். =========கண்ணீர் வருகிறதுஅமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் பெலகாவியில் நேற்று அளித்த பேட்டியில், ''மேல்சபையில் எங்களுக்கும், எதிர்க்கட்சிக்கும் வாக்குவாதம் நடந்த பின், நான் அமைதியாக எனது இருக்கையில் சென்று அமர்ந்தேன். எங்கள் தலைவர் ராகுலை பார்த்து போதை பொருளுக்கு அடிமையானவர் என்று ரவி தொடர்ந்து கூறினார்.''இதனால் எனக்கு கோபம் வந்தது. விபத்தை ஏற்படுத்தி உயிர்களை கொன்று உள்ளீர்கள். நீங்கள் கொலைகாரர் அல்லவா என்று கேட்டேன். இதனால், என்னை பார்த்து ஆபாச வார்த்தையை பயன்படுத்தினார். எனக்கு மனவேதனையாக உள்ளது. ஒரு பெண் அரசியலில் இருப்பது அவ்வளவு எளிது இல்லை. கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்து உள்ளேன். என்னை பார்த்து நிறைய பெண்கள் அரசியலுக்கு வர ஆசைப்பட்டனர். ரவி பேசிய வார்த்தைகளை நினைத்தால் எனக்கு கண்ணீர் வருகிறது,'' என்றார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ