வாக்காளருக்கு ரூ.10,000 தருது பா.ஜ., ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டு
புதுடில்லி:“பா.ஜ.,வினர் தலைவர்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்குகின்றனர்,” என, ஆம் ஆத்மி கூறியுள்ளது.ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் சிங், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:டில்லி சட்டசபை தேர்தலில் நியாயமாக வெற்றி பெற முடியாது என்பதை பா.ஜ., உணந்து விட்டது. அதனால், பல குறுக்கு வழிகளைக் கையாளுகிறது. ஒரு வாக்காளருக்கு 10,000 ரூபாய் தர, பா.ஜ., நிதி ஒதுக்கியுள்ளது. ஆனாலும், அந்தப் பணத்திலும் பா.ஜ., நிர்வாகிகள் ஊழல் செய்துள்ளனர். வாக்காளருக்கு ஆயிரம் ரூபாயை மட்டும் கொடுத்து விட்டு, மீதி 9,000- ரூபாயை பா.ஜ., நிர்வாகிகள் தங்கள் பாக்கெட்டில் போட்டுக் கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பா.ஜ., தலைவர்கள் ஓட்டுக்களை விலைக்கு வாங்க தயாராகி விட்டனர். தேர்தலில் முறைகேடு செய்தே பழக்கப்பட்ட பா.ஜ.,வுக்கு டில்லியில் வெற்றி பெற முடியாது என்பது புரிந்து விட்டது. அதனால்தான், வாக்காளர்களை கவர பணம் கொடுத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார். முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியதாவது:சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ பணம் கொடுத்து வாக்காளர்களை பா.ஜ., மோசடி செய்கிறது. டில்லி தேர்தலில் பாஜக அனைத்து மோசடி எல்லைகளையும் தாண்டி விட்டது. முறைகேடாக சம்பாதித்த பணத்தில் இருந்து, கட்சியின் உயர்நிலை தலைவர்கள் வேட்பாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். அதில், ஒரு வாக்காளருக்கு 10,000 ரூபாய் கொடுத்த அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், வாக்காளர்களோ பா.ஜ., நிர்வாகிகள் தங்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக கூறுகின்றனர். கட்சி நிர்வாகிகளே ஊழல் செய்தால், அந்தக் கட்சியின் ஆட்சியை டில்லி மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். ஓட்டு கேடு வரும் பா.ஜ., வேட்பாளரிடம் ஒவ்வொரு வாக்காளரும் மீதி 9,000 ரூபாய் எங்கே? என கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். அமைச்சர் சவுரவ் பரத்வாஜ், நிருபர்களிடம் கூறியதாவது:ஓட்டுக்கு பணம் கொடுப்பது மட்டுமின்றி, வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்வதன் மூலமும் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயலில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது.வாக்காளர் பட்டியலிலிருந்து ஆயிரக்கணக்கான வாக்காளர்களை நீக்கி விட்டு, போலி வாக்காளர்களை சேர்த்துள்ளது. டில்லியில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைமுறையை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். கடுங்குளிர் நிலவும் தலைநகர் டில்லியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அரசியல் கட்சிகளிடையே அனல் கக்கும் போர் நடக்கிறது. இரண்டு முறை தொடர்ந்து ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி, 'ஹாட்ரிக்' வெற்றி பெற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.அதே நேரத்தில், மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி நடத்தும் பா.ஜ., டில்லியில் கால் நூற்றாண்டுக்குப் பின், சட்டசபையை கைப்பற்ற கடும் முயற்சி செய்து வருகிறது.இதற்கிடையில், காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளன.