பா.ஜ., ரவியை என்கவுன்டர் செய்ய சதி மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி குற்றச்சாட்டு
ஹூப்பள்ளி: ''பா.ஜ., - எம்.எல்.சி., ரவியை கொலை செய்ய சதி நடந்துள்ளது. மாநிலத்தில் என்ன நடக்கிறது?'' என, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கேள்வி எழுப்பினார்.ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:கைது செய்ததன் பின்னணியில், தன்னை கொலை சதி இருப்பதாக ரவி கூறியுள்ளார். இதில் உண்மை இருக்கும். அவரை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. மாநிலத்தில் என்ன நடக்கிறது? சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்துவோம்.அதிகாரிகளின் செயலை நாங்கள் கண்டிக்கிறோம். ஒரே அரசு தொடர்ந்து இருக்காது. ஆட்சி மாறும். பெலகாவி போலீஸ் கமிஷனர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரவி கைது விஷயத்தில் சட்டவிரோதமாக நடந்துள்ளனர். அவரை கானாபுரா, கப்பியின் வயல் பகுதிக்கு ஏன் அழைத்துச் சென்றனர் என, கேள்வி எழுப்பினால், கமிஷனர் மழுப்பலாக பதிலளிக்கிறார்.பெலகாவி சுவர்ண விதான் சவுதாவுக்குள் புகுந்தவர்களை ஏன் கைது செய்யவில்லை? இதுகுறித்து ரவி, சட்டப்போராட்டம் நடத்த வேண்டும். இதற்கு என்ன உதவி தேவை என்றாலும் செய்ய நாங்கள் தயார். சட்டம் பற்றி, பெலகாவி கமிஷனருக்கு பாடம் நடத்த வேண்டும்.சுவர்ண விதான்சவுதாவில் சம்பவம் நடந்த பின், அவசர, அவசரமாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர். அமைச்சரின் தனி உதவியாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவாகியுள்ளது. இவர் சுவர்ண விதான்சவுதாவுக்குள் இருந்தாரா? போலீஸ் கமிஷனருக்கு பொது அறிவு இல்லையா? இவர் ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருக்கவே தகுதி அற்றவர்.ரவியை என்கவுன்டர் செய்வது பற்றி ஆலோசித்துள்ளனர். இதுபோன்று என்கவுன்டர் செய்தால், பா.ஜ.,வினர் பயந்து மூலையில் அமர்ந்து கொள்வர் என்பது, காங்கிரஸ் அரசின் எண்ணம். ஊடகத்தினர் இல்லாதிருந்தால், ரவி என்கவுன்டர் செய்யப்பட்டிருப்பார் என, தோன்றுகிறது.ரவியை போலீசார் எங்கு அழைத்துச் செல்கின்றனர் என்பது குறித்து, எங்களின் மற்றொரு எம்.எல்.சி., கேசவ பிரசாத் மற்றும் ஊடகத்தினர் மூலமாக, எங்களுக்கு 'லைவ் லொகேஷன்' கிடைத்தது. எனவே போலீசாரால், ரவியை என்கவுன்டர் செய்ய முடியவில்லை.நடந்த சம்பவத்துக்கு, உள்துறையின் தோல்வியே காரணம். சம்பவம் குறித்து சட்ட வல்லுனர்களிடம், ஆலோசனை பெறும்படி அவரிடம் கூறியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.