உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக கவர்னர் விவகாரம்: ராஜ்யசபாவில் பா.ஜ.,- தி.மு.க., வாக்குவாதம்

தமிழக கவர்னர் விவகாரம்: ராஜ்யசபாவில் பா.ஜ.,- தி.மு.க., வாக்குவாதம்

தமிழக சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி, கவர்னர் வெளிநடப்பு செய்த விவகாரம், பார்லிமென்டில் நேற்று வெடித்தது. இது தொடர்பாக தி.மு.க., - பா.ஜ., எம்.பி.,க்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜ்யசபாவில் நேற்று, ஜனாதிபதி உரை மீதான வாதத்தில் தி.மு.க., - எம்.பி., கனிமொழி சோமு பேசியதாவது:பார்லிமென்டில் ஜனாதிபதி உரை நிகழ்த்த வரும்போது, லோக்சபாவில் செங்கோலை எடுத்துச் சென்று, வாசலில் வரவேற்றுவிட்டு மீண்டும் அதை லோக்சபாவில் வைத்தனர். இது ஒரு மரபு. இதேபோல தான் தமிழக சட்டசபையில் கவர்னர் உரையின்போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும், முடிவில் தேசிய கீதம் பாடுவதும் மரபாக உள்ளது.இவ்வாறு கனிமொழி பேசியபோது, பா.ஜ., - எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அரசியலமைப்பு சட்டப் பதவிகளில் உள்ளவர்கள் குறித்து, இங்கு பேசக்கூடாது என வாதிட்டனர்.

சட்டசபை உரிமை

இதையடுத்து ராஜ்யசபா சபை முன்னவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான நட்டா கூறுகையில், ''தமிழக கவர்னர் குறித்து பேசிய விஷயங்களை சபைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்,'' என, கோரிக்கை வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., உறுப்பினர் சிவா, ''தமிழக சட்டசபையில் என்ன நடந்ததோ, அதைப் பற்றிதான் இங்கு பேசப்பட்டது. புதிதாக எதையும் பேசவில்லை. யாரைப் பற்றியும் பெயர் குறிப்பிட்டுப் பேசவில்லை. சட்டசபையின் உரிமையும், மரபும் முடக்கப்படுவதை கனிமொழி விளக்கினார்,'' என்றார்காங்கிரஸ் எம்.பி., ஜெய்ராம் ரமேஷ், ''அரசியலமைப்பு சட்டப் பதவிகளில் உள்ளவர்கள், அந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக நடக்கும்போது, அதற்கு என்னதான் தீர்வு?'' எனக் கேள்வி எழுப்பினார்.

எங்கு முறையிடுவது?

தி.மு.க., - எம்.பி., என்.ஆர்.இளங்கோ, ''மத்திய அரசு தயாரித்து தரும் உரையை ஜனாதிபதி இங்கு பேசுகிறார். ''அதுபோலதான், மாநில அரசு எழுதித் தரும் உரையை சட்டசபையில் கவர்னர் வாசிக்க வேண்டும். ஆனால், அவரோ அதை மறுக்கிறார். இதற்கு, நாங்கள் எங்கு போய் முறையிடுவது,'' என்று கேட்டார்.இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சபையில் சில நிமிடங்கள் அமளியும், கூச்சலுமாக இருந்தது.

'தடுப்பூசி மையம் வேண்டும்'

லோக்சபாவில், தி.மு.க., -- எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது:செங்கல்பட்டில், 800 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்ட மத்திய அரசின் எச்.எல்.எல்., பயோடெக் நிறுவனம், கடந்த 12 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இந்த திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட்ட போது, அது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.காரணம் பி.சி.ஜி., தட்டம்மை, ரேபிஸ், ஹெபடைடிஸ் உள்ளிட்ட 75 சதவீத தடுப்பூசி தேவைகளை, இது உறுதி செய்யும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. இந்தியாவின் சுகாதார பாதுகாப்புக்கு முக்கியமானதாகவும் கருதப்பட்டது.செயல்படாமல் கிடக்கும் இந்த தடுப்பூசி மையத்தை, தமிழக அரசு பயன்படுத்த முடிவு செய்திருந்தது. அதற்காக, அதை குத்தகைக்கு தரும்படி தமிழக முதல்வர் பலமுறை கேட்டுஉள்ளார். இந்த திட்டத்துக்கு நிலம் வழங்கியது தமிழக அரசுதான். அதனால்தான், அதன் செயல்பாட்டு உரிமையை தமிழக அரசு கோருகிறது.எனவே, உள்நாட்டு தடுப்பூசி தயாரிப்புக்கான அவசர தேவையை கருதி, தமிழக அரசுக்கு தடுப்பூசி மையத்தை தருவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

GMM
பிப் 05, 2025 08:14

தமிழ் தாய் வாழ்த்து தணிக்கை செய்த பாடல். மாநில அளவில் மரபு. மாநில கவர்னர் தேசிய அரசியல் சாசனம் பிரதிநிதி. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி, கவர்னர், தணிக்கை தலைவர், தேர்தல் ஆணையர் மற்றும் ஆர். பி. ஐ . கவர்னர் தேசிய பாதுகாப்பு வளையத்தில் இருப்பர். இவர்கள் அதிகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறுக்கிட முடியாது. நீதிமன்றம் அத்தியாவசிய பணியின் கீழ் வராது. பிஜேபி ஆளுமையில் நீதிபதிகள் அதிகம் அதிகாரம் செலுத்த முடிகிறது.. முக்கிய பதவிகளின் மாண்பை காக்க பிஜேபி தவறி வருகிறது. தவறான நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சினால், மக்களை வக்கீல்கள் வதக்கி விடுவர். வக்கீல் மூலம் தேச விரோதிகள், தீவிரவாதிகள், அந்நிய சக்திகள் நீதி, நிர்வாகத்தில் புகுந்து விடுவர்.


Kasimani Baskaran
பிப் 05, 2025 07:34

ஏற்கனவே முதலில் தேசிய கீதம் பாடவேண்டும் என்ற அரசாணை இருக்கிறது. அதை உதாசீனப்படுத்தி விட்டு தமிழ்த்தாய் என்று உருட்டி தமிழர் அல்லாதோர் எழுதிய பாடலை வைத்து பஜனை செய்து வந்தது திராவிட சமூக தீ. கோஷ்டி. கவர்னர் உரையை கட்சியின் கோட்பாடுகளை, கொள்கைகளை புகுத்துவது அறிவீனம்.


sridhar
பிப் 05, 2025 07:26

இந்த ஆளுநர் தான் எங்களுக்கு வேணும். திமுகவுக்கு பிடிக்கலைன்னா ராஜினாமா செய்துட்டு போகட்டும்.


பல்லவி
பிப் 05, 2025 06:44

கல்லூரி பேராசிரியருடன் தொடர்புடைய ஆட்சி யாளர் மீது நடவடிக்கை எடுக்கு முன்னர் மாற்று ஆட்சியாளர்கள் நியமனம் செய்து விட்டு வேறு ஒன்றும் செய்யாமல் , அதாவது ஒன்றிய அரசு ஒன்றும் செய்யாமல் இதுவும் கடந்து போகட்டுமே


ஆரூர் ரங்
பிப் 05, 2025 11:15

இப்படி அபத்தமா எழுதிய நக்கீரன் கோபால் பின்னர் தவற்றை ஒப்புக் கொண்டு முன்னாள் கவர்னரிடம் மன்னிப்புக் கேட்டு விட்டார்.


Laddoo
பிப் 05, 2025 06:41

200 ரூவா, ஊசிப்போன பிரியாணி கொடுத்து எம்பிகள் ஆன கான்டீன் கூட்டம். தகுதியில்லா தர்க்குறிகளை தேர்ந்தெடுத்த தமிழக மக்களை குற்றம் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை


xyzabc
பிப் 05, 2025 03:44

கான்டீன் போண்டா ஜீரணம் ஆகி விடும்.


புதிய வீடியோ