லோக்சபா தேர்தலுக்கான பா.ஜ., தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடியின் 'நமோ' செயலியில் பொதுமக்கள் தங்கள், 'ஐடியா'க்களை குவித்து வருவது அக்கட்சிக்கு புது தெம்பை அளித்துள்ளது. மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஆட்சிக் காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ளதால், அடுத்த ஓரிரு மாதங்களில் லோக்சபா தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடு களை, தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் நாடு முழுதும் தேர்தல் பிரசாரங்களை துவக்கி உள்ளன. அழைப்பு
இதன் ஒரு பகுதியாக பா.ஜ., தேர்தல் அறிக்கையில், நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் ஆலோசனைகள் வழங்க அழைப்பு விடுக்கப்பட்டது.அந்த அழைப்பில், 'வரும், 2024 லோக்சபா தேர்தலுக்கான பா.ஜ., அறிக்கையில் இளைஞர்கள் தங்கள் பங்களிப்பை வழங்க அழைப்பு விடுக்கிறேன். நமோ செயலியில் உங்கள் எண்ணங்களைப் பகிரவும். அவர்களில் சிலரை சந்திக்கவும் ஆவலுடன் உள்ளேன்' என, பிரதமர் தெரிவித்து இருந்தார்.பொதுமக்களிடம் இதுபோல் கருத்து கேட்க தனியார் நிறுவனங்களையே அரசியல் கட்சிகள் நாடி வந்த சூழலில், பா.ஜ.,வின் இந்த முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது. தங்கள், 'மொபைல் போனில்' தரவிறக்கம் செய்யப்பட்ட நமோ செயலி வாயிலாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகளை பாராட்டியுள்ள பொதுமக்கள், பல்வேறு யோசனைகளை தெரிவித்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதை பாராட்டியுள்ள பலர், நாடு முழுதும் ஆக்கிரமிப்பில் உள்ள ஹிந்து கோவில்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மக்களின் யோசனை
ஊழலை கட்டுப்படுத்துவது, லஞ்சத்தை ஒழிப்பது, கல்வி, சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்துவது என, பொதுமக்களின் யோசனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.ஒரே நாடு - ஒரே தேர்தல், நகர்ப்புற நிலப் பிரச்னைகளுக்கான விரைவு நீதிமன்றங்கள் அமைத்தல், சுற்றுலா தலங்களை மேம்படுத்துதல், பாடப் புத்தகத்தை மறுவரைவு செய்தல், உள்நாட்டு உற்பத்தியை 3 சதவீதமாக உயர்த்துதல், கல்விக்கென தனி பட்ஜெட் தயாரித்தல் என, பலவித புதுமையான யோசனைகளை பொதுமக்கள் நமோ செயலி வாயிலாக முன்வைத்துள்ளனர்.தமிழகத்தைச் சேர்ந்த சங்கர் நாராயணன், சேகர் உள்ளிட்டோர் தங்கள் கருத்துகளில், 'தென் மாநிலங்களில் உச்ச நீதிமன்றத்தின் அமர்வு அமைக்க வேண்டும்.'எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓய்வூ தியம் மற்றும் ஓய்வுக்கு பிந்தைய சலுகைகளை ரத்து செய்ய வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக தமிழர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் சூழலில், அதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளனர்.பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வின் கடந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சி பல்வேறு சாதனைகள் புரிந்த நிலையில், அது வரும் காலங்களில் தொடர வேண்டும் என பலர் வாழ்த்தியுள்ளனர். மக்களின் வாழ்த்துகளுடன் கூடிய யோசனைகள் சேகரிக்கப்பட்டு, ஒரு குழு வாயிலாக பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பா.ஜ., மூத்த தலைவர் கூறியுள்ளார்- நமது சிறப்பு நிருபர் - .