உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என் தொலைபேசி ஒட்டு கேட்பு; பா.ஜ., - எம்.எல்.ஏ., பகீர்

என் தொலைபேசி ஒட்டு கேட்பு; பா.ஜ., - எம்.எல்.ஏ., பகீர்

ராய்ச்சூர் : ''என் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்கப்படுகிறது,'' என்று, ராய்ச்சூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சிவராஜ் பாட்டீல் பகீர் தகவல் கூறி உள்ளார்.ராய்ச்சூர் நகர தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சிவராஜ் பாட்டீல். இவர், நேற்று காலை ராய்ச்சூர் எஸ்.பி., அலுவலகத்திற்கு சென்று, எஸ்.பி., புட்டமாதய்யாவை சந்தித்து பேசினார். 'எனது தொலைபேசி உரையாடல், கடந்த சில மாதங்களாக ஒட்டு கேட்கப்படுகிறது. மொபைல் போன் டவரை வைத்து நான் எங்கு உள்ளேன் என்று, சிலர் கண்காணிக்கின்றனர். இத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.இதுகுறித்து புகார் அளித்தால், உரிய விசாரணை நடத்துவதாக எஸ்.பி., புட்டமாதய்யா பதில் அளித்தார். விரைவில் புகார் செய்வதாக கூறிவிட்டு சிவராஜ் பாட்டீல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டியில், ''இது பற்றி ராய்ச்சூர் எஸ்.பி.,யிடம் பேசி விபரங்களை பெற்று கொள்வேன். எம்.எல்.ஏ., கூறியது உண்மை என்றால், விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவேன்,'' என்றார்.அரசியல்வாதிகளின் மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்படுவதாக, சில தினங்களுக்கு முன்பு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.கர்நாடக அரசியலுக்கும், தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பிற்கும் பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. கடந்த 1988ம் ஆண்டு முதல் முறையாக தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அப்போது ஆட்சியில் இருந்த ராமகிருஷ்ண ஹெக்டேயின் அரசு கவிழ்ந்தது.மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி, முதல்வராக இருந்த போது, மடாதிபதி ஒருவரின் மொபைல் போன் ஒட்டு கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது, மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ