உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் வீட்டு வாசலில் பா.ஜ., பிரமுகர் சுட்டுக்கொலை

பீஹாரில் வீட்டு வாசலில் பா.ஜ., பிரமுகர் சுட்டுக்கொலை

பாட்னா: பீஹாரில், பிரபல தொழிலதிபரும், பா.ஜ., பிரமுகருமான கோபால் கெம்கா, வீட்டு வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. தலைநகர் பாட்னாவில் காந்தி மைதான் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட, 'ட்வின் டவர்' பகுதியில், பிரபல தொழிலதிபர் கோபால் கெம்கா குடும்பத்துடன் வசித்து வந்தார்.இவர், பா.ஜ.,வில் முக்கிய பொறுப்பில் இருந்தார். தொழில் நிமித்தமாக வெளியே சென்ற அவர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். வீட்டை ஒட்டிய, 'பனாச் ஹோட்டல்' அருகே, இரவு 11:30 மணிக்கு வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், கோபாலை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பினார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். போலீசார் விரைந்து வந்து, துப்பாக்கி தோட்டா உள்ளிட்ட முக்கிய பொருட்களை அங்கிருந்து பறிமுதல் செய்தனர். சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.கொலை வழக்கை பதிவு செய்த போலீசார், கோபால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.கொலையாளியை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக கோபால் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.ஆறு ஆண்டுகளுக்கு முன், கோபாலின் தொழிற்சாலை வாசலில் அவரது மகன் குஞ்சன் கெம்கா, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இப்போது கோபாலும் அதேபோல் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கு கண்டனம் தெரிவித்த பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி, ''பீஹாரில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மாதந்தோறும் தொழிலதிபர்கள் கொல்லப்படுவது தொடர்கிறது. காட்டு ராஜ்ஜியம் நடக்கும் இங்கு, மக்களுக்கு பாதுகாப்பு இல்லை,'' என, குற்றஞ்சாட்டினார். கோபால் கெம்கா கொலையைத் தொடர்ந்து, மாநில டி.ஜி.பி., வினய்குமார் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் உயரதிகாரிகளுடன், முதல்வர் நிதிஷ் குமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.'மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். அலட்சியமாக உள்ள போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 'கோபால் கெம்கா கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்' என, போலீசாரிடம் முதல்வர் நிதிஷ் வலியுறுத்தியதாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை