பா.ஜ., பிரமுகர் சுட்டுக்கொலை ஹரியானாவில் நடந்த கொடூரம்
சண்டிகர்: ஹரியானாவில் நிலத்தகராறு காரணமாக உள்ளூர் பா.ஜ., பிரமுகரை, அண்டை வீட்டார் துரத்திச் சென்று சுட்டுக்கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.ஹரியானாவில் உள்ள சோனிபட் மாவட்டத்தின் முண்ட்லானா மண்டல பா.ஜ., தலைவராக பதவி வகித்தவர் சுரேந்திர ஜவஹர், 42. சமீபத்தில், இவரது அண்டை வீட்டைச் சேர்ந்த மோனு என்பவரது உறவினர்களிடம் இருந்து நிலத்தை விலைக்கு வாங்கினார்.இதனால் அதிருப்தி அடைந்த மோனு, சுரேந்திர ஜவஹருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பந்தப்பட்ட நிலத்திற்குள் காலடி எடுத்து வைக்கக்கூடாது என்றும் அவருக்கு, மோனு எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையே, அந்நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுத்தம் செய்யும் பணியை சுரேந்திர ஜவஹர் மேற்கொண்டார்.இது, மோனுவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுரேந்திர ஜவஹரை, கொலை செய்யும் நோக்கத்துடன் அவர் சென்றார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேந்திர ஜவஹர், அருகில் உள்ள கடைக்குள் நுழைந்து தப்பிக்க முயற்சித்தார். ஆனாலும், அவரை துரத்திச் சென்ற மோனு, அந்த கடைக்குள் புகுந்து, சுரேந்திர ஜவஹரை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டார். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், தப்பியோடிய மோனுவை கைது செய்தனர்.